நியூயார்க்,பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா நாடுகளுக்கு அவர் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டது. முதலில் சைப்ரஸ் சென்ற அவர், பின்னர் கனடா நாட்டுக்கு சென்றார். கனடாவின் கால்கரியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். அப்போது, இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
ஜி7 உச்சி மாநாட்டை முடித்த பின்னர், முன்பே திட்டமிட்டபடி பிரதமர் மோடி, குரேஷியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். பால்கன் நாடான குரோஷியாவுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது என்பது இது முதன்முறையாகும்.
இந்நிலையில், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று கூறும்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், பிரதமர் மோடி அதனை ஏற்கவில்லை என கூறியுள்ளார்.
கனடாவில் இருந்து திரும்பும்போது வழியில் அமெரிக்காவுக்கு வந்து விட்டு செல்லுங்கள் என பிரதமரிடம் டிரம்ப் கேட்டு கொண்டார். ஆனால், முன்பே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளன என கூறி, தன்னால் அமெரிக்காவுக்கு வரமுடியாத சூழலை டிரம்பிடம் பிரதமர் மோடி கூறி விட்டார் என மிஸ்ரி கூறியுள்ளார்.
டிரம்ப், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது, முன்பே கிளம்பி விட்டார். அவர் கூட்டம் முடியும் வரை முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனினும், டிரம்ப் கேட்டு கொண்டதற்காக, தலைவர்கள் இருவரும் 35 நிமிடங்கள் தொலைபேசி வழியே பேசினர்.
அப்போது, அடுத்த குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வரும்படி டிரம்பை பிரதமர் மோடி அழைத்துள்ளார். அதனை ஏற்று கொண்ட டிரம்ப், இந்தியாவுக்கு வருவதில் அதிக ஆர்வத்துடன் உள்ளேன் என கூறினார் என்று மிஸ்ரி கூறியுள்ளார். இந்த பேச்சின்போது, ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.
பயங்கரவாத ஒழிப்புக்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு வலுவாக ஆதரவு தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடியிடம் அப்போது டிரம்ப் கூறினார்.