கோலாலம்பூர்,
மலேசியாவின் டிஜிட்டல் கிரியேட்டிவ் துறை கடந்த 2023ஆம் ஆண்டில் RM5.3 பில்லியன் வருமானம் மற்றும் RM800 மில்லியன் ஏற்றுமதி மதிப்புடன் முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார். இந்த வளர்ச்சி 10,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற ‘உப்பின் & இப்பின் யூனிவர்ஸ்’ (Upin & Ipin Universe) வீடியோ கேமின் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், Malaysia Digital Economy Corporation (MDEC) மூலம் தயாரிக்கப்பட்ட Digital Creative Ecosystem Roadmap (DICE) திட்டத்தின் கீழ், மலேசியா 2030ற்குள் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பிராந்திய மற்றும் உலகத் தலைமையகமாக உருவாக்கப்படும் என்ற திட்டக்கருவை முன்வைத்தார்.
மிக வேகமாக வளர்ந்து வரும் கேமிங் துறையை தொடர்ந்து ஊக்குவிக்க, MDEC நிறுவனம் ‘Animated Shorts Challenge’ மற்றும் ‘Digital Games Testbed’ எனும் இரு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதுமை, முதலீடு, திறமை மேம்பாடு மற்றும் சந்தை அணுகல் ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Les’ Copaque Productions மற்றும் Streamline Studios இணைந்து உருவாக்கிய ‘Upin & Ipin Universe’ என்ற புதிய ஓப்பன்-வேர்ல்ட் கேம், ஜூலை 17 முதல் Steam, Epic Game Store, PlayStation 4, 5 மற்றும் Nintendo Switch ஆகிய தளங்களில் வெளியிடப்பட உள்ளது. 12 மணிநேர கதைப்போக்குடன் கூடிய இந்த கேம் உலகளவில் பிரபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேம் வெளியீடு வெறும் ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்வாக இல்லாமல், மலேசியாவின் கலாச்சாரம் மற்றும் புதுமையின் அடையாளமாக கருதப்பட வேண்டும் என்றும், இது தொகுப்புக் கலைஞர்களிடையே உள்ள ஒத்துழைப்புப் பணியின் வெளிப்பாடாக உள்ளது என்றும் கோபிந்த் சிங் தெரிவித்தார்.