மலேசிய இந்திய முஸ்லீம் உணவகம் (பிரெஸ்மா) பல வருடங்களாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினைக் குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆனால் இன்றளவும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்று பிரெஸ்மாவின் 21ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தின்போது டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தய்யூப்கான் @ டத்தோ அலி மாஜு தெரிவித்தார்.
குறிப்பாக மாற்றுத் தொழிலாளர்கள் பிரச்சினை மிகவும் அதிகமாக இருக்கிறது. அதே போல் ஒரு தொழிலாளி 10 ஆண்டுகள் வரை மட்டுமே பணியாற்ற முடியும் என்ற சட்டம் குறித்தும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். எவ்வாறு முதலாளி விரும்பும் வரை பணிப்பெண் பணியாற்ற முடியுமோ அதே போல் உணவகப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
மேலும் வருடத்திற்கு ஒரு முறை விசா நீட்டிப்பை இராண்டு என்று மாற்றினால் எங்களை போன்ற முதலாளிகளுக்கு சற்று நிம்மதி பெருமூச்சு விட முடியும். எங்களுக்கு தற்போது ஏறக்குறைய 15,000 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். அரசாங்கத்திடம் எங்கள் கோரிக்கைகளை முன்வைக்கப்படும் போதெல்லாம் உள்ளூர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி கொள்ளுமாறு கூறுகின்றனர். நாங்கள் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் பணிக்கு வர யாரும் தயாராக இல்லை என்பதே எங்களின் ஆதங்கம்.
குறைந்தபட்ச சம்பளம் 1,700 என்பது அரசாங்கம் நிர்ணயித்து இருக்கிறது. ஆனால் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் விசா நீட்டிப்பிற்கு குறைந்தது 1,850 ரிங்கிட் முதல் 3,500 ரிங்கிட் செலவாகிறது. மேலும் வருடத்திற்கு சொக்சோ, ஊழியர் சேமநிதி என்று 1,500 ரிங்கிட்டிற்கு மேல் முதலாளிகள் செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வளவு பிரச்சினைக்கு இடையிலும் எங்களின் வர்த்தகத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் அரசாங்கத்திடம் வைக்கும் கோரிக்கை தொழிலாளர் பற்றாக்குறை மட்டுமே. இன்றைய ஆண்டுக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைத்துறை துணை அமைச்சர் செனட்டர் டத்தோ டாக்டர் ஹாஜா ஃபுஸியா சாலேவிடம் எங்களின் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம் என்றார் டத்தோ அலி மாஜு.













