ஜோகூர் பாரு பேரங்காடியில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர் காயம்!

ஜோகூர்:

ஜோகூர் தாமான் ஜோகூர் ஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கரத் தீயை அணைக்கும் பணியின் போது, கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் 23 வயது தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.

ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அந்த வீரர், கட்டிடத்திற்கு வெளியே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு துண்டுகள் அவர் மீது விழுந்தன. இதில் அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவருக்குச் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இன்று காலை 7.21 மணியளவில் ஜாலான் செரோஜா 56-இல் உள்ள பேரங்காடியில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தது.

அழைப்பு வந்த இரண்டு நிமிடங்களிலேயே தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தன. காலை 9.10 மணியளவில் தீ ஓரளவிற்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்தத் தீ விபத்தில் ஒன்றரை அடுக்கு கொண்ட தொழிற்சாலை கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இது ஒரு மொத்த விற்பனை மற்றும் விநியோக மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. நான்கு கடைத் தொகுதிகளைக் கொண்ட அந்தப் பகுதியில் சுமார் 70 சதவீத சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அருகிலுள்ள மூன்று கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தீ விபத்திற்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here