ஜோகூரில் போதைப்பொருள் கும்பல் ஒன்றின் மூளையாகச் செயல்பட்டவர் உள்பட ஐவர் கைது; RM2.07 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

கோலாலம்பூர்:

ஜோகூர் மாநில போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் கும்பலின் தலைவன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மாலை 4.20 மணியளவில், தாமான் புக்கிட் இண்டா (Taman Bukit Indah) பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் மீது போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த வீடு போதைப்பொருட்களைப் பாதுகாக்கும் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது என்று, ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் கூறினார்.

இந்த நடவடிக்கையில் 43 முதல் 53 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உள்ளூர் சந்தை மற்றும் அண்டை நாட்டிற்குப் போதைப்பொருள் கடத்துவதில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

15.29 கிலோ மெத்தாம்பேட்டமின் (Methamphetamine), 5.37 கிலோ MDMA பவுடர், எக்ஸ்டஸி (Ecstasy) மாத்திரைகள், கெட்டமின், கஞ்சா மற்றும் யாபா (Yaba) மாத்திரைகள் உட்பட சுமார் RM1.45 மில்லியன் மதிப்புள்ள 21.75 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் தவிர, RM616,010 மதிப்பிலான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன: அவற்றுள் 6 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், RM270,150 ரொக்கப் பணம் மற்றும் ஒரு தங்க மோதிரம் என்பன அடங்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளது என்றும், அனைவரும் மெத்தாம்பேட்டமின் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் அனைவரும் 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் ஜனவரி 10 முதல் 16 வரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here