கோலாலம்பூர்,
இவ்வாண்டு 13ஆவது மலேசிய திட்டத்தின் தொடக்கத்திற்கு ஏற்ப 2026ஆம் ஆண்டிற்கான அமைச்சின் மாற்றத்தை செயல்படுத்தும் ஒரு அங்கமாக 10 முன்னுரிமை திட்டங்களை வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சு வகுத்துள்ளது.
2026 வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சின் (KPKT) வியூக இலக்குகள் தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சின் உயர்மட்ட தலைவர்களுடன் இந்த முதன்மை திட்டங்கள் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இந்த தீர்வு வெறும் விவாத தளம் மட்டுமல்ல, ஒவ்வொரு திட்டமும் மக்களின் நல்வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும், பயனுள்ள, கவனம் செலுத்தும் செயல்படுத்தலாக அமையப்பெறுவதை உறுதி செய்வதற்கான ஒரு முதன்மை வழிகாட்டி என்று அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற KPKT 2026 வியூக இலக்குகள் தொடர்பான கலந்துரையாடலில் தனது நிறைவு உரையை நிகழ்த்தும்போது அவர் இவ்வாறு கூறினார்.
KPKT-இன் உயர்மட்டத் தலைமையை ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை பினாங்கில் மூன்று நாட்களுக்கு நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டிற்கான KPKT-இன் 10 முதன்மை இலக்குகள்:
1. புதிய நில விற்பனை மேம்பாட்டுச் சட்டம் ((RPDA), மின்னணு விற்பனை, கொள்முதல் ஒப்பந்தங்கள் (eSPA), வீட்டுவசதி ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு (HIMS), Teduh தளம், வீட்டுவசதி மேம்பாட்டுக் கணக்குகளின் டிஜிட்டல் தணிக்கை (HIDA) உள்ளிட்ட ஐந்து வீட்டுவசதி சீர்திருத்தங்கள்.
2. மக்கள் நட்புறவு வீட்டுடைமைத் திட்டம் (RMR), மலிவு விலை வீடுகள் (RMM) திட்டம்.
3. வடிகால் அமைப்புகளை சுத்தம் செய்தல், மேம்படுத்துதல்.
4. மடானி பொழுதுபோக்கு பூங்காக்கள் (TRM) மூலம் பசுமையான சூழலை வழங்குதல்.
5. முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் பராமரித்தல் (RIBI). 6. புதிய சீனர், இந்தியர் கிராம மேம்பாடு.
7. கடைகளை நிர்மாணித்தல், பொது சந்தைகளை மேம்படுத்துதல். 8. நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டம் (PPKB).
9. கைவிடப்பட்ட தனியார் வீட்டுத் திட்டங்களின் மறுசீரமைப்பு.
10. ஸ்மார்ட் சிட்டி மதிப்பீடுகளை செயல்படுத்துதல்.
இதற்கிடையில், இந்த கலந்துரையாடலில் வழங்கப்பட்ட KPKT 2026- 2030 வியூக இலக்குகள் தொடர்பான கருத்தாய்வுகள் துறைசார்ந்த திட்டங்களில் செயல்வடிவம் காணும் ஒரு வழிமுறையாக முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறினார்.
இந்த வியூக இலக்கு திட்டத்தில் ஐந்து வியூகங்கள், 24 உத்திகள், 142 இலக்குகள், 44 செயல்திறன் வழிகாட்டிகள், ஏழு முக்கிய செயல்திறன் வ்ழிகாட்டிகள் ஆகியவை அடங்கும், இவை 2030 வரை கட்டங்கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
நம்பகமான தலைமை, வலுவான அர்ப்பணிப்பு, அனைத்து KPKT ஊழியர்களின் ஒத்துழைப்புடன், திட்டமிடப்பட்ட அனைத்து உயர்மட்ட முயற்சிகளையும் அட்டவணைப்படி செயல்படுத்த முடியும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
விரிவான பொறுப்புணர்வு, நேர்மை அடிப்படையிலான சேவை வழங்கலை உறுதி செய்வதற்காக மக்கள், பொது, தனியார் கூட்டாண்மை கொள்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு KPI-யும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துமாறு KPKT-இன் கீழ் உள்ள துறைகள், நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.



















