குவாந்தான்:
பகாங் மாநிலத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில், செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் கூடிய முதலாவது நடமாடும் கால்நடை மருத்துவமனையை மாநில கால்நடை சேவைகள் துறை (DVS) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நடமாடும் மருத்துவமனையானது வெறும் முதலுதவி வாகனம் மட்டுமல்லாமல், ஒரு நிரந்தர மருத்துவமனைக்கு இணையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்று நோக்கினால், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளுக்கெனத் தனித்தனி அறைகள், அவசர கால அறுவை சிகிச்சைகள் மற்றும் மயக்க மருந்து (Anaesthesia) வழங்கும் வசதிகள், சிகிச்சை பெறும் விலங்குகளைத் தற்காலிகமாகத் தடுத்து வைத்துப் பராமரிப்பதற்கான வசதியான கூண்டுகள் மற்றும் உரிமையாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளவும், அமர்ந்து காத்திருக்கவும் நிழற்குடையுடன் கூடிய பகுதிகள் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது.
இந்த நடமாடும் கால்நடை மருத்துவமனையில் பூனைகள், நாய்கள், முயல்கள் மற்றும் ஹேம்ஸ்டர்கள் போன்ற சிறிய வகை செல்லப் பிராணிகளுக்கு நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், விலங்குகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் குடல் புழு நீக்கச் சிகிச்சை, சிறிய வகை அறுவை சிகிச்சைகள் மற்றும் இனக்கட்டுப்பாட்டு (Neutering) அறுவை சிகிச்சைகள்மற்றும் வளர்ப்புப் பிராணிகளின் உணவு மற்றும் பராமரிப்பு குறித்த நிபுணர்களின் அறிவுரைகள் ஆகிய சேவைகள் வழங்கப்படும்.
“இந்த நடமாடும் மருத்துவமனையானது ஒவ்வொரு மாதமும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் செல்லும். இதன் மூலம் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நீண்ட தூரம் பயணித்துக் கால்நடை மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய சிரமம் குறையும்,” என பகாங் மாநில DVS இயக்குநர் நோர்ஹலிஸா அப்துல் ஹாலிம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘கம்போங்கூ செரியா’ (Kampungku Ceria) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வாகனத்தின் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன. இச்சேவைக்காக மிகவும் குறைந்த அளவிலான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















