அசுர வேகத்தில் ரிங்கிட்: 5 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! 4.00 என்ற வலுவான தடையை உடைத்துச் சாதனை!

கோலாலம்பூர்:

மலேசியப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வரும் நிலையில், சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு இன்று வரலாறு காணாத எழுச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், ரிங்கிட் இன்று 4.00 என்ற வரம்பை மீறி, தடையை உடைத்து முன்னேறியுள்ளது.

இன்று பிற்பகல் 2.19 மணி நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.9992 ஆக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மட்டும் ரிங்கிட்டின் மதிப்பு சுமார் 1.5 விழுக்காடு வரை வளர்ச்சி கண்டுள்ளது முதலீட்டாளர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மலேசிய மத்திய வங்கியான ‘பேங்க் நெகாரா’ (Bank Negara Malaysia), தனது ஓவர்நைட் பாலிசி ரேட் (OPR) வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாகவே நிலைநிறுத்தியுள்ளது. இது சந்தையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததோடு, நாட்டின் விலை நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வலுவை உறுதிப்படுத்த உதவியது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 99.0 புள்ளிகளுக்குக் கீழே சரிந்துள்ளது. ஐரோப்பிய முதலீட்டாளர்கள் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களைக் குறைப்பது மற்றும் ஜப்பானியப் பத்திர சந்தையில் நிலவும் மாற்றங்கள் டாலரின் மதிப்பைக் குறைத்துள்ளன.

மலேசியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான கெனாங்கா ரிசர்ச் கருத்துப்படி, டாலர் பலவீனமடைவதும், மலேசியாவின் சாதகமான பொருளாதாரக் கண்ணோட்டமுமே ரிங்கிட்டின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

ரிங்கிட் வலுவடைவதால், மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இது நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, மக்களின் வாங்கும் சக்தியையும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here