மெல்போர்ன், பிப். 5:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள இந்திய சமுதாயக் கூடத்தில் இருந்த மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை மர்ம நபர்களால் உடைத்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அந்நாட்டு இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்னின் ரோவில் (Rowville) புறநகர் பகுதியில் ‘ஆஸ்திரேலிய இந்திய சமூக மையம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 426 கிலோ எடையுள்ள காந்தியின் வெண்கலச் சிலையை, மூன்று பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் உடைத்து எடுத்துச் சென்றுள்ளது. சிலையின் ஒரு காலைத் தவிர மற்ற அனைத்துப் பாகங்களையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சிலை இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், இந்திய அரசால் ஆஸ்திரேலியாவிற்குப் பரிசாக வழங்கப்பட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இதனைத் திறந்து வைத்தார்.
மேலும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான அமைதி மற்றும் நட்புறவின் அடையாளமாக இந்தச் சிலை கருதப்பட்டது.
இந்தத் திருட்டுச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில், குற்றவாளிகளைப் பிடிக்க விக்டோரியா மாகாண காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைதியின் உருவமாகத் திகழும் காந்தியின் சிலை சிதைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பது குறித்து சமூகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

























