கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ‘மலேசியாவிற்கு வருகை தாருங்கள் 2026’ (Visit Malaysia 2026) பிரச்சாரத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பைத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி வெளியிட்டார்.
மேற்கு ஆசிய மோதல்கள் காரணமாக, அங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11% முதல் 27% வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரித்துள்ளதும் சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்கட்டான சூழலிலும் மலேசியாவை ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான சுற்றுலாத் தலமாக உலகிற்கு அடையாளப்படுத்த கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.
இந்தக் காலநீட்டிப்பின் மூலம், நாட்டின் சுற்றுலா சந்தைப்படுத்தல் உத்திகளை (Marketing Strategies) மேலும் வலுப்படுத்தவும், இலக்குகளை வெற்றிகரமாக எட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.





















