பாரிட், ஏப்ரல் 9, 2026:
கடந்த 10 ஆண்டுகளாகத் தனது கைபேசியில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களைச் சேமித்து வைத்திருந்த 42 வயது தந்தைக்கு, பாரிட் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (Magistrate Court) 6 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
விவாகரத்து பெற்ற அந்த நபர், கடந்த திங்கட்கிழமை மதியம் 12.51 மணியளவில் ஒரு கிராமத்தில் வைத்து பிடிபட்டார். அவரிடம் இருந்த ‘Oppo A35’ ரக கைபேசியைச் சோதனையிட்டபோது, அதில் 341 ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தக் குற்றம் மலேசிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292(a)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், ஒருவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீதிபதியின் ஆவேசமான அறிவுரை:
வழக்கை விசாரித்த நீதிபதி நுருல் இஸாலினா ராஜாஅய், குற்றம் சாட்டப்பட்ட நபரை நோக்கிப் பல தார்மீகக் கேள்விகளை எழுப்பினார்:
நீங்கள் ஒரு தந்தை என்பதை மறந்துவிட்டீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் உங்கள் மனம் எப்படித் துடிக்கும்? உங்கள் சொந்தக் கண்ணியத்தையே உங்களால் காப்பாற்ற முடியாவிட்டால், உங்கள் பிள்ளைகளின் கண்ணியத்தை எப்படிப் பாதுகாப்பீர்கள்?” மேலும், அந்த நபர் தனது 77 வயது தந்தையைப் பராமரித்து வருவதால் அபராதத்திற்குப் பதில் சிறைத்தண்டனை வழங்குமாறு கோரினார். இதைக் கருத்தில் கொண்ட நீதிபதி, அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர், ஏற்கனவே ஈப்போ (Ipoh) செஷன்ஸ் நீதிமன்றத்தில் குழந்தைகள் ஆபாசப் படங்களை (Child Pornography) வைத்திருந்த குற்றத்திற்காகவும் ஆஜர்படுத்தப்பட்டு, அங்குத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















