செப்டம்பர் 16 மலேசியா தினம்: சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடு!

கோலாலம்பூர்:

நாட்டில் தீவிரமடைந்து வரும் எல்லை தாண்டிய அடர் புகைமூட்டம் காரணமாக, எதிர்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள சபா மாநில அளவிலான மலேசியா தினக் கொண்டாட்டம், திறந்தவெளி அரங்கிலிருந்து சபா அனைத்துலக மாநாட்டு மையத்திற்கு (SICC) மாற்றப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி விழா மிகக் கோலாகலமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே இந்த இடம் மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சபா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோ ஜாஃப்ரி அரிஃபின் தெரிவித்தார்.

சபா மாநில ஆளுநர் துன் மூசா அமானைச் சந்தித்து அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அமைச்சரவை இம்மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேநேரம் சரவாக், கூச்சிங்கில் நடைபெறும் தேசிய அளவிலான கொண்டாட்டத்திற்கு இணையான நேரத்திலேயே, சபா மாநில அளவிலான இவ்விழாவும் இரவுக் 8.00 மணிக்குத் தொடங்கும்.

இவ்விழாவில் ‘மலேசியா மடானி’ சிறப்பு காணொளிகள், பிரம்மாண்ட நடன நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் பிரபலக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சுவாரசியமான அங்கங்கள் இடம்பெறவுள்ளன.

இவற்றுடன், சபா மாநில ஆவணக் காப்பகம் சார்பில் மலேசியா தினத்தின் வரலாற்றுச் சிறப்புகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.

எனவே, கோத்தா கினபாலு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தோடு வருகை தந்து செப்டம்பர் 16 மலேசியா தின விழ சிறப்பிக்க வேண்டும் என அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here