FIC சொத்துகள் & முதலீட்டு முறைகேடு வழக்கு: சிறையிலுள்ள முன்னாள் ஃபெல்டா தலைவரிடம் வாக்குமூலம் பெற MACC திட்டம்!

கோலாலம்பூர்:

ஃபெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (FIC) நிறுவனத்தின் சொத்துகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஊழல் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அதன் முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பெற மலேசியச் சிறைத் துறையின் அதிகாரப்பூர்வ ஒத்துழைப்பை நாடவுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அறிவித்துள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதன் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் இத்தகவலைத் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில சொத்துகளை வாங்கியதற்கும், FIC மேற்கொண்ட முதலீடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், சிறையிலுள்ள அந்த முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பெற அடுத்த வாரம் சிறைத் துறைக்கு முறையான கோரிக்கை விடுக்கப்படும் என அவர் கூறினார்.

‘Op Fella’ எனும் சிறப்பு நடவடிக்கையின் கீழ் இதுவரை 7 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஃபெல்டா வாரியம் மற்றும் நிர்வாகத்தின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 29 முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாகச் சரவாக் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சொத்து பறிமுதல்கள், லண்டன் போன்ற வெளிநாடுகளில் விடுதிகளை கையகப்படுத்தியது மற்றும் நெகிரி செம்பிலான், ஃபெல்டா பாலோங் 7 விவகாரங்கள் குறித்தும் ஊழல் தடுப்பு ஆணையம் மிகத் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here