Home சினிமா குறும்புத்தனமான ‘பிராங்க் ஷோ’நடத்தும் கதாநாயகி, படம் “ஆடை” -விமர்சனம்

குறும்புத்தனமான ‘பிராங்க் ஷோ’நடத்தும் கதாநாயகி, படம் “ஆடை” -விமர்சனம்

நடிகர்: விவேக் பிரசன்னா நடிகை: அமலாபால் டைரக்ஷன்: ரத்னகுமார் இசை : பிரதீப் குமார் ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணா தனியார் தொலைக்காட்சியில் பிராங்க் ஷோ நடத்தும் கதாநாயகி அமலாபால், படம் ஆடை சினிமா விமர்சனம்.

பைக் ரேஸ், மது, பந்தயம், நிர்வாணமாக செய்தி வாசிப்பதாக சவால் விடுவது என்றெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறார். அலுவலகத்தை காலி செய்த கட்டிடத்தில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுகிறார்.

அப்போது எல்லோரும் மது அருந்துகிறார்கள். போதை எல்லை மீறுகிறது. தோழி ரம்யாவுடன் தகராறு செய்கிறார். மற்ற ஆண் நண்பர்கள் சமரசம் செய்கிறார்கள்.

விடியும்போது யாரும் இல்லாமல் தான் மட்டும் ஆடை எதுவும் அணியாமல், நிர்வாண கோலத்தில் இருப்பதை பார்த்து பதறுகிறார். உடலை மறைக்க துண்டு பேப்பர் கூட அங்கு இல்லாமல் தவிக்கிறார். பக்கத்து கட்டிட அலுவகத்தில் இருந்து ஒருவன் ஆள் அரவம் இருப்பதாக நோட்டம் விட்டு அங்கு வருகிறான்.

பிறகு இரண்டு திருடர்கள் வருகிறார்கள். அங்கு ஒரு பெண் கொலையுண்டு கிடப்பதாக போலீசும் வருகிறது. அவர்கள் பார்வையில் படாமல் மானத்தை காப்பாற்ற கட்டிடத்துக்குள்ளேயே ஒளிந்து ஓடுகிறார். அவரை ஆடை இல்லாமல் ஆக்கியது யார்? அங்கிருந்து எப்படி வெளியே வருகிறார்? என்பது மீதி கதை.

அமலாபாலுக்குள் இருக்கும் மொத்த நடிப்பு திறமையையும் வெளிக்கொண்டு வந்துள்ள படம். முழு படத்தையும் அவரது கதாபாத்திரம் தாங்கி நிற்கிறது. முதல் பாதியில் பந்தயம் கட்டி ஜெயிக்கும் துடுக்குத்தனம், பட்டு சேலையுடன் சாமி கும்பிடுவதை கெட்ட கனவு என்பது, மது அருந்துவதை நியாயப்படுத்துவது என்றெல்லாம் காமினி என்ற மாடர்ன் பெண்ணாக பரபரப்பூட்டுகிறார்.

ஆடை இல்லாமல் கட்டிடத்துக்குள் சிக்கிய பிறகு அழுகை, கோபம், விரக்தி என்று உணர்ச்சிகளை நேர்த்தியாக முகத்துக்கு கடத்துகிறார்.

குப்பையை கிளறி ஒட்டு துணி தேடுவது, நாய்களிடம் கடிபட்டு ரத்த காயங்களோடு கதறுவது ஆகிய காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார். அமலாபாலுக்கு விருது கிடைக்கலாம்.

நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, ரம்யா, ரோஹித், நந்தகுமார், கிஷோர், தேவ் ஆகியோரும் கதாபாத்திரங்களில் ஒன்றி இருக்கிறார்கள்.       ‘பிளாஷ்பேக்’கில் வரும் அந்த பெண்ணின் கதை நெகிழவைக்கிறது. ‘பிராங்க் ஷோ’ நீளத்தை குறைத்து இருக்கலாம். ரம்யா என்ன ஆனார்? என்றும் சொல்லவில்லை. குறும்புத்தனமான ‘பிராங்க் ஷோ’க்களின் பாதிப்பு, பெண்ணியம் பேசி கட்டுப்பாடுகளை மீறும் பெண்களுக்கு நேரும் சங்கடங்கள் ஆகியவற்றை அழுத்தமாக காட்சிப்படுத்திய ரத்னகுமார், தேர்ந்த டைரக்டராக கவனம் பெறுகிறார்.

இன்றைய சமூகத்துக்கு தேவையான நல்ல படைப்பை கொடுத்ததற்காக, அவரை பாராட்டலாம். நிர்வாண காட்சிகளை விரசம் இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது, விஜய் கார்த்திக் கண்ணனின் கேமரா. ஊர்கா பேண்ட் பிரதீப் குமார் இசையில், நீ வானவில்லா பாடல் மனதை வருடுகிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. இன்றைய சமூகத்துக்கு தேவையான ‘ஆடை’.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version