Home Uncategorized அன்று கம்ப்யூட்டர்களைப் பராமரித்த ஊழியர் இன்று ஜிபிஎஸ் குழுமங்களின் நிறுவனர்

அன்று கம்ப்யூட்டர்களைப் பராமரித்த ஊழியர் இன்று ஜிபிஎஸ் குழுமங்களின் நிறுவனர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி

இத்தனை ஆண்டுகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற ஓர் இலக்கை நிர்ணயித்து செயல்பட ஆரம்பித்தால் அடுத்த கணமே சோர்வு நம்மைவிட்டுப் பறந்துவிடும். இதை உண்மையாக்கியிருக்கிறார் நாகேந்திரன். இளம் வயதிலேயே சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணத்தை மனதில் விதைத்து தன் இலக்கை நோக்கிச் சோர்வின்றி உழைத்து இன்று பல நிறுவனங்களின் கம்ப்யூட்டர், லேப்டாப்-களை விற்பனை செய்யும் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்திவருகிறார்.

கடந்த 26 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை நடத்திவரும் நாகேந்திரன் தன் வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரகுநாதபுரம் என்ற சிறிய கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். 12ஆம் வகுப்புவரை அங்குள்ள அரசுப் பள்ளியிலும், அடுத்து மதுரையில் உள்ள யாதவர் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பும் முடித்தேன்.

அந்தக் காலகட்டத்தில்தான் கம்ப்யூட்டரின் பயன்பாடு பிரபலமாக ஆரம்பித்திருந்தது. எனவே, கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பு படிக்கலாம் என எனது அப்பாவின் நண்பர் அப்துல்காதர் மூலம் சென்னைக்கு வந்தேன். ஒரு தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் டிப்ளமோ கோர்ஸ் படித்தேன்.
முஸ்லீம்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை மற்றும் பிசினஸ் செய்வார்கள்.

அதுபோலவே எனது அப்பாவின் நண்பரின் மகன்கள் ஹாங்காங்கில் பிசினஸ் செய்துகொண்டிருந்தனர். அவர் மூலமாக அங்கே செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் சென்னைக்கு என்னை படிக்க அனுப்பி வைத்தார் அப்பா. படித்துக்கொண்டிருக்கும்போதே சென்னை எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. வீட்டில் நான் ஹாங்காங் சென்று வேலை பார்க்க வேண்டும் என நினைத்தார்கள்.

ஆனால், சென்னையில்தான் வேலை செய்ய வேண்டும் என நான் நினைத்தபோது, 300 ரூபாய் சம்பளத்தில் ஒரு கம்பெனியில் கணினிப் பிரிவில் இ.டி.பி. இன்சார்ஜ் வேலை கிடைத்துவிட்டது. அதாவது, அந்த கம்பெனியில் 10 கம்ப்யூட்டர் இருக்கிறது என்றால், அதனை பராமரிப்பது என் பொறுப்பு. எனது சம்பளம் 300 ரூபாய். ஆனால் சென்னையில் வாழ்க்கையை நடத்த எனது தேவையோ 3000 ரூபாய்.

அந்த கம்பெனியில் எனக்கு தலைவராக இருந்தவர் ஒருநாள் ‘‘உன்னுடைய திறமைக்குத் தனியாக பிசினஸ் செய்தால் நல்லதொரு வருமானம் பார்த்து பிழைத்துக்கொள்வாய், என்னைப் போன்று வேலையிலேயே காலத்தை ஓட்டிவிடாதே’’ என முதன்முதலாக என் திறமையைக் கண்டுபிடித்து அறிவுரை வழங்கினார். அவரின் வார்த்தைகள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது’’ என்கிறார் நாகேந்திரன்.

‘‘உலகத்தை உள்ளங்கைக்கு கொண்டு வருவது கம்ப்யூட்டர். நான் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என எண்ணியபோது எனக்குத் தோன்றியதும் கம்ப்யூட்டர் தொடர்பான நிறுவனம் தொடங்க வேண்டும் என்பதுதான். அவர் சொல்லை வேதவாக்காக மனதில் எடுத்துக்கொண்டு எனக்கிருந்த தொடர்புகளை வைத்து ஹார்டு டிஸ்குகளை வாங்கிவந்து வேலை முடிந்து மாலை நேரங்களில் விற்க ஆரம்பித்தேன்.

ஒரு மூன்று மாதங்கள் அப்படியே விற்பனை செய்துகொண்டிருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் அதிகமாகி விற்பனையில் வளர்ச்சி தெரிய ஆரம்பித்தது. நமக்கு ஒரு தொழில் இருக்கிறது என்ற நம்பிக்கையில் 1994ல் வேலையைவிட்டு விலகினேன். 6-வது மாதம் வெள்ளிக்கிழமை 10 மணிக்கு ஜிகா பைட் சிஸ்டம்ஸ் (ஜிபிஎஸ்) என்ற பெயரில் ஒரு புதிய கம்பெனியைத் தொடங்கினேன்.

ஏனெனில், ஜிகா பைட் சிஸ்டம்ஸ் (Giga Byte Systems) கம்பெனி என்பது அன்றைக்கு சர்வதேச அளவில் கம்ப்யூட்டர்களின் மதர்போர்டுகளை உருவாக்கும் பிரபலமான நிறுவனம். அதுபோன்ற கம்பெனியாக வரவேண்டும் வளரவேண்டும் என ஆசைப்பட்டு ஜிகா பைட் சிஸ்டம்ஸ் என்ற பெயரை வைத்தேன்’’ என்று தன் நிறுவனத்தின் பெயர்க் காரணத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘அப்போது எனது கம்பெனிக்கு முதலாளி, வேலைக்காரன் என எல்லாமே நான்தான். சென்னை கே.கே.நகரில் சிறியதாக ஒரு அறை எடுத்து முன்பக்கம் கம்பெனியும் பின்பக்கம் தங்கும் இடமுமாக அந்த நிறுவனத்தை நடத்தினேன். வாடிக்கையாளர்களை நேரில் சென்று சந்தித்து மார்க்கெட்டிங் செய்தேன். அடுத்து இரண்டு மாதங்களில் தனியாக ஒரு அலுவலகம் தொடங்கினேன்.

அதற்கடுத்து இரண்டு மாதங்களில் கம்ப்யூட்டர்களை ரிப்பேர் செய்ய எஞ்சினியர்களை வேலைக்கு அமர்த்தினேன். 1995-ல் 5 பேர் நிரந்தரமாக என்னிடம் வேலை செய்யும் அளவுக்கு நிறுவனம் வளர்ந்துவிட்டது. இந்த வளர்ச்சியினால் 1996-ல் அலுவலகத்தை மெயின்ரோடுக்கு மாற்றினேன். அந்த சமயத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது.

1997-ல் எனக்கொரு மகள் பிறந்தாள். இதற்கிடையில் என்னுடைய நிறுவனத்தில் 15 பேர் வேலைக்கு சேர்ந்துவிட்டார்கள். கம்பெனியை ஜிபிஎஸ் பெயரில் ரிஜிஸ்டர் பண்ணலாம் என முயற்சித்தபோது ஏற்கனவே பிரபலமாக உள்ள கம்பெனியின் பெயர் என்பதால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

எனவே தான் ஜிபிஎஸ் சர்வீஸ் சிஸ்டம் எனப் பதிவு செய்தேன். வாடிக்கையாளர்களைத் தேடிச் சென்று எனது நிறுவன ஊழியர்கள் சர்வீஸ் செய்து
கொடுத்து வந்தனர். இந்த நிலையில் முதன்முதலாக 1999ல் கே.கே.நகர் மெயின்ரோட்டில் ஒரு ஷோரூமைத் திறந்தேன். மல்டி பிராண்டட் கம்ப்யூட்டர்களை சர்வீஸ் செய்யத் தொடங்கினேன்.

அதற்கடுத்த ஓர் ஆண்டில் மடிப்பாக்கத்தில் மற்றொரு ஷோரூம் மற்றும் 2007-ல் ஓ.எம்.ஆர். சாலையில் சொந்த கட்டடத்தில் ஷோரும் என ஒவ்வொன்றாக திறந்தேன்’’ என்று தன் நிறுவனத்தின் படிப்படியான வளர்ச்சியை பெருமிதத்தோடு தெரிவித்தார்.

‘‘தற்போது பிராண்டட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் டெல், ஹெச்பி, லெனோவா மற்றும் லேப்டாப்களில் டெல், ஹெச்பி, லெனோவா மற்றும் ஆப்செட் பிரிண்டர்ஸ், போட்டோ ஸ்மார்ட், ஐபிஎம் சர்வர் மற்றும் ஸ்டோரேஜ் மவுஸ், கீபோர்டு, மானிட்டர்ஸ் உள்பட பல கம்ப்யூட்டர்  தொடர்பான பொருட்களும் ஜிபிஎஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

அதையடுத்து அனைத்து சாஃப்ட்வேர்ஸ், இன்வெட்டர், இன்வெட்டர் பேட்டரி, சோலார் இன்வெட்டர், சோலார் வாட்டர் ஹீட்டர் உள்பட பலவற்றையும் கொண்டு ஒரு நிறைவான விற்பனையைச் செய்துவருகிறோம். ஜிபிஎஸ் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் வரிசையில் உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை கந்தன்சாவடி, கே.கே.நகர், வேளச்சேரி, புரசைவாக்கம், தாம்பரம், அடையார், அண்ணாநகர், போரூர், தாம்பரம் உள்பட 11 கிளைகளைத் தொடங்கியுள்ளோம். மேலும், ஸ்ட்ராட்டஜைர் ஃபிரான்சைஸி கன்சல்டன்சி சர்வீசஸ் மூலம் முதன்முதலாக திருச்சியில் கிளை அலுவலகம் திறந்தேன்.

அடுத்து மதுரையில் சிம்மக்கல் கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் எங்கள் கிளை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. பெங்களூருவில் ஏற்கனவே இரண்டு கிளைகள் இயங்கி வரும் நிலையில் எங்கள் நிறுவனத்தின் 34வது கிளையையும் தற்போது திறந்துள்ளோம்’’ என்று சொன்னவர் நிறுவன வளர்ச்சியில் ஊழியர்களின் பங்கு குறித்தும் தெரிவித்தார்.

‘‘நிறுவனங்களைத் தொடங்குவதால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. ஒரு நிறுவனத்தின் இரண்டு கண்கள் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும்தான். நான் நினைத்ததைவிட ஊழியர்கள் நமது தொழிலை மேலும் சிறப்பாகச் செய்துகொடுத்தால், அதற்காக அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் ஊக்கத்தொகையோ, சன்மானமோ வழங்க வேண்டும்.

ஜிபிஎஸ்சை பொறுத்தவரை ஊழியர்களை ஊக்குவித்து ஆண்டுதோறும் அவர்களுக்குப் பரிசுகளையும், பாராட்டுகளையும் கொடுக்கத் தவறுவதில்லை.
தமிழகம் முழுவதும் மேலும் பல கிளைகளைத் தொடங்கி ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய முக்கிய குறிக்கோளாக உள்ளது.

கண்டிப்பாக அதை நிறைவேற்றுவோம்’’ என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் ஜிபிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் நாகேந்திரன். தொழிலில் முன்னணியில் இருந்தாலும் சமூக சேவையாக தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வருபவர்களுக்கு 3 மாதங்கள் இலவசமாக தங்குவதற்கு இடம் கொடுத்து வேலை கிடைப்பதற்கான முயற்சிகளையும் செய்துகொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version