Home தொழில்நுட்பம் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பின் மீதான ஆர்வத்தை தூண்டும் ரீடிங் ரோபோ

குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பின் மீதான ஆர்வத்தை தூண்டும் ரீடிங் ரோபோ

பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் இழந்து வரும் ஓர் அற்புத விஷயம் வாசிப்பு. பரபரப்பான நவீன வாழ்க்கை முறையும் சூழலும் வாசிப்பு குறைந்து போனதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், வாசிப்பின் மீதான ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கான காரணி களும் இல்லாமல் போனது இன்னொரு காரணம். இந்த நிலையில் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பின் மீதான நேசத்தையும், ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் தூண்ட ஒருவர்  வந்துவிட்டார். அவரின் பெயர் லூக்கா.

லூக்கா மனிதர் அல்ல; அவர் ஒரு ரீடிங் ரோபோ. சுமார் 38,000 புத்தகங்களை லூக்காவால் அடையாளம் கண்டு சரளமாக வாசிக்க முடியும். அதுவும்ஓய்வில்லாமல். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இது இயங்குகிறது.

ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், சைனீஸில் நல்ல புலமை வாய்ந்தது. குழந்தை வாசிக்க வேண்டிய புத்தகத்தை லூக்காவின் முன்பு வைத்தாலே  போதும். நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. லுக்கா அந்தப் புத்தகத்தை ஒரு  குழந்தையின் குரலில் உச்சரிப்பு பிழையில்லாமல் வாசிக்க ஆரம்பிக்கும்.

அப்போது உங்களின் குழந்தை எங்கிருந் தாலும் லூக்காவின் அருகில் வந்துவிடும். குழந்தை பக்கத்தில் வந்து தனது வாசிப்பை கவனிக்கிறதா என்று லூக்கா நோட்டமிடும். குழந்தை கவனிப்பது தெரிந்துவிட்டால் தீவிரமாக வாசிக்க ஆரம்பிக்கும். ஒரு பக்கம் முடிந்துவிட்டால் அடுத்த பக்கத்தை குழந்தை திருப்பும் வரை அது காத்திருக்கும். அந்த இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது விளையாட்டு காட்டி குழந்தையைக் குஷிப்படுத்தும். அத்துடன் வாசிக்கும் போது இடையில் சில நொடிகள் நிறுத்தும்.

அப்போது அந்தக் குழந்தை லூக்கா நிறுத்திய இடத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கும். அப்படி குழந்தை வாசிக்கும்போது லூக்கா இடையூறு செய்யாமல் அதைக் கவனிக்கும்; உற்சாகப்படுத்தும். லூக்காவின்  இந்த  இடை நிறுத்தல் தான் குழந்தையின் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்கிறது.

இப்போது அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கிஃப்ட் வாங்கித் தருவதை விட லூக்காவை ஆர்டர் செய்கிறார்கள். அந்தளவுக்கு மேற்கத்திய குடும்பங்களில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது லூக்கா.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version