Home இந்தியா முப்படைக்கும் ஒரே தலைவர் : நாட்டின் பாதுகாப்பு படைகளை வலுவானதாக்க பிரதமர் மோடி புதிய அதிரடி

முப்படைக்கும் ஒரே தலைவர் : நாட்டின் பாதுகாப்பு படைகளை வலுவானதாக்க பிரதமர் மோடி புதிய அதிரடி

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இனி முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பின் செங்கோட்டையில் பேசிய மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார்.

முப்படைக்கும் ஒரே தலைவர் 

அப்போது  சுதந்திர தின உரையில் அவர் கூறியதாவது, ‘நம் பாதுகாப்பு படைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. இந்த முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இன்று நான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதன்படி இனிமேல் இந்தியாவில் Chief Of Defence Staff(CDS) என்ற புதிய பதவி உருவாக்கப்படவுள்ளது. இந்தப் பதவியை வகிப்பவர் தான் இந்தியாவின் ராணுவம், விமானம், கப்பல் ஆகிய முப்படைகளுக்கும் ஒரே தலைவராக இருப்பார். இது நமது நாட்டின் பாதுகாப்பு படைகளை மேலும் வலுவானதாக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்

குடியரசுத் தலைவருக்கு பெயருக்கு மட்டுமே அதிகாரம்

தற்போது முப்படைக்கும் தளபதியாக குடியரசுத் தலைவர் இருந்து வருகிறார். ஆனால் பொதுவாக குடியரசுத் தலைவர் தளபதியாக இருந்தாலும் கூட, முக்கியமான நேரங்களில் மட்டுமே அவரிடம் ஆலோசனை கேட்கப்படும். இந்த மூன்று படைகளையும் மூன்று படைகளையும் மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் அல்லது பாதுகாப்பு துறை ஆலோசகர்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார். குடியரசுத் தலைவருக்கு பெயருக்கு மட்டுமே இந்த அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்திய படைகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லை

இதைத்தான்  தற்போது மத்திய அரசு மாற்ற முடிவெடுத்துள்ளது. அதன்படி ராணுவத்தை சேர்ந்த, அல்லது முன்னாள் ராணுவத்தை சேர்ந்த, பாதுகாப்பு துறையில் அனுபவம் உள்ள ஒரு நபரை மூன்று படைக்கும் சேர்த்து தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதன் மூலம் மூன்று படைகளையும் ஒரே குடைக்குள் கொண்டு வர முடியும். இந்திய ராணுவம் வலுவான ராணுவமாக இருந்தாலும் கூட, இந்திய படைகளுக்கு இடையில் பெரிய அளவில் தற்போது ஒற்றுமை இல்லை.

அதாவது விமானப்படை எப்போது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது கடற்படைக்கு தெரியாது. கடற்படை செய்யும் ஆபரேஷன் தரைப்படைக்கு தெரியாது. இவர்களுக்கு இடையில் சரியான தகவல் பரிவர்த்தனை இல்லை. பாகிஸ்தானில் இந்திய விமானி அபிநந்தன் சிக்கிய போதே இதை இந்திய பாதுகாப்புத் துறை உணர்ந்து கொண்டது. அப்போதில் இருந்தே மூன்று படைக்கும் ஒரே தலைவரை நியமிக்க வேண்டும் என்று பாஜக அரசு நினைத்து வந்தது. அப்போதுதான் இவர்களுக்குள் சரியான தகவல் பரிமாற்றம் இருக்கும். அதனால்தான் தற்போது தலைவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

ஆனால் மூன்று படைகளையும் ஒரே நபர் வழி நடத்துவது என்பது ஆபத்தான விஷயமும் கூட. ஏனென்றால் மூன்று படைகளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஒரு நபர், பிரதமருக்கு இணையான சக்தியை கொண்டு இருக்கிறார் என்று கூட கூறலாம். அவர் நினைத்தால் எதிர்காலத்தில் என்னவேண்டுமானாலும் செய்யலாம். பல நாடுகளில் ராணுவ ஆட்சிகள் இப்படித்தான் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleசிறுக சேமித்த பணத்தில் தமிழ்ச் சிறுமி எடுத்த குறும்படத்திற்கு விருது!
Next article73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் சென்ற தோனிக்கு உற்சாக வரவேற்பு..!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version