Home Hot News போலீஸ் அதிரடியில் பலியான மூவர். மோகனாம்பாள் மாயம்

போலீஸ் அதிரடியில் பலியான மூவர். மோகனாம்பாள் மாயம்

கோலாலம்பபூர் – கடந்த சனிக்கிழமை பத்து ஆராங், சிலாங்கூரில் போலீசுடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நபர்கள் மரணமுற்றது தொடர்பாகவும் இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் காணாமல் போனதாக கூறப்படுவது பற்றியும் மலேசிய மனித உரிமைகள் ஆணையம்(சுஹாகாம்)விசாரணை செய்யும்.சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து தகவல்களைப் பெற்ற பிறகு சில கேள்விகளுக்குப் பதில் தெரிந்தாக வேண்டும் என்பதை சுஹாகாம் ஒப்புக்கொள்கிறது என்று அதன் ஆணையர் ஜெரால்ட் ஜோசப் நேற்றுக் கூறினார்.

இந்தத் துப்பாக்கிச்சுட்டுச் சம்பவம் பற்றி சுஹாகாம் விசாரிக்கும். அதேசமயம் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் பற்றியும் விசாரிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.கடந்த சனிக்கிழமை இலங்கைப் பிரஜையான ஜனார்த்தனன் விஜயரத்தினம், இவருடைய மைத்துனர் தவச்செல்வன், மகேந்திரன் சந்திர சேகரன் ஆகிய மூவர் பண்டார் கன்ட்ரிஹோம்சில் பயணம் செய்த காரை நிறுத்தும்படி போலீசார் உத்தர விட்டனர்.

ஆனால், அந்தக் கார் நிற்காமல் சென்றதால் போலீஸ் அந்தக் காரை 7 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த மூவரும் கொள்ளையர்கள் எனவும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் அந்த மூவரும் பலியானதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின்போது ஜனார்த்தனின் மனைவி மோகனாம்பாள் கோவிந்தசாமியும் அங்கிருந்ததாக உறவினர்கள் கூறிக்கொண்டனர்.எனினும் சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ நூர் அசாம் ஜமாலுடின் இதனை மறுத்துள்ளார். அந்தக் காரில் மூன்று ஆடவர்கள் மட்டுமே இருந்தனர் என்றும் பெண்கள் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மூவரும் கிரிமினல்கள் அல்லர் என்று குடும்பத்தார் கூறிக்கொண்டதாகவும் ஜோசாப் தெரிவித்தார். இது தொடர்பில் போலீசார் துரித விசாரணை நடத்தி அதன் முடிவைச் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் தெரிவிக்க வேண்டு மென்று அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வழக்கறிஞர் சிவானந்தன் ராகவன் வாயிலாகப் புகார் கோரிக்கை மனுவை நேற்று சுஹாகாமிடம் ஒப்படைத்தனர்.மோகனாம்பாள் அந்தக் காருக்குள் இருந்த நிலையில் அவர் உயிரோடு இருப்பாரானால் போலீசார் அவரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டுமென ஜோசப் கேட்டுக்கொண்டார்.சிலாங்கூர் மாநிலப் போலீசை சுஹாகாம் சந்திக்கும். புக்கிட் கன்ட்ரிஹோம்ஸில் உள்ள புலன் விசாரணை அதிகாரியிடம் இருந்து விவரத்தைப் பெறுவோம். சவப்பரிசோதனை செய்த தடயவியல் மருத்துவர்களையும் நாங்கள் விசாரிப்போம்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு முழு அறிக்கை கிடைக்க அனுமதிக்க வேண்டுமென்று அவர் கூறினார். இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் உண்மையை அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.மே மாதம் தொடங்கி இங்கு நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்களுக்கு இந்த மூவர்தான் காரணம் என போலீஸ் எப்படிக் கூறுகிறது என அவர் கேட்டார்.
ஜனார்த்தனனும் மோகனாம்பாளும் இங்கிலாந்தில் நிரந்தரக் குடியிருப்பு அந்தஸ்தைப் பெற்றவர்கள். கடந்த மாதம் விடுமுறையைக் கழிக்க அவர்கள் குடும்பத்தாருடன் மலேசியா வந்தனர்.

இவர்களின் குடும்பம் இங்கிலாந்தில் கொஞ்சம் வசதியாகவே வாழ்கிறது என்று அவர் சோன்னார்.இந்த விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் தேவை என்று தவச்செல்வனின் மனைவி ஜஸ்மிண்டர் கவுர் கூறியிருக்கிறார்.எனக்கு முறையான விளக்கம் தேவை. என் கணவருக்கு என்ன நேர்ந்தது? என் கணவரின் அக்காள் மோகனாம்பாள் எங்கே? அவரின் கணவர் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version