Home ஆன்மிகம் வேளாங்கண்ணி பேராலய பெருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

நாகை – வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா நேற்று கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர்.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியை புனிதம் செய்து வைத்தார்.

புனிதம் செய்யப்பட்ட கொடி வேளாங்கண்ணி பேராலய முகப்பில் இருந்து கடற்கரை சாலை, ஆரியநாட்டுத்தெரு, திராவிடர் ஒட்டல் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பேராலய முகப்பை வந்தடைந்தது. பேராலய அதிபர் பிரபாகரன் மற்றும் பாதிரிமார்கள், அருட்சகோதரிகள் முன்னிலையில் புனிதக்கொடி கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பேராலய கலையரங்களில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடந்தது.
பேராலயம், மாதா குளம், பேராலய கீழ்கோவில், மேல் கோவில், புனிதப்பாதை, விண் மீன் ஆலயம் ஆகியவற்றில் கடந்த 29ம் தேதியிலிருந்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது. அந்தந்த மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டு மாதாவின் ஆசியை பெற்றனர். இதை தொடர்ந்து கடந்த 30ம் தேதி கொங்கனி, தமிழ், ஆங்கிலம், மராத்தி சிலுவை பாதை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த 29ம் தேதி தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நேற்று முன்தினம் (7ம் தேதி) இரவு நடந்தது. முன்னதாக கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேசன்சூசை தலைமையிலும், பேராலய அதிபர் பிரபாகரன் முன்னிலையிலும் பேராலய கலையரங்கத்தில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் லட்சக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதிரிமார்களும், அருட்சகோதரிகளும் பக்தர்களின் இருப்பிடத்திற்கே சென்று திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கினர். இதை தொடர்ந்து பெரியத்தேர் பவனி நடந்தது. புனித ஆரோக்கிய மாதா பெரியத்தேரில் எழுந்தருள, அதைத்தொடர்ந்து பெரியத்தேரின் முன்பு 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருளினர். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

விழாவின் நிறைவு நாளான நேற்று (8ம் தேதி) காலை விண்மீன் கோயிலில் புனித ஆரோக்கிய அன்னையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேசன் சூசை தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. இதை தொடர்ந்து புனித ஆரோக்கிய அன்னையில திருக்கொடி இறக்கப்பட்டது. பேராலய கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகியவை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Previous articleதென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம்
Next articleகரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் கோயில் திருவிழா

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version