Home உலகம் அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!

ஃபோர்ட் வெர்த் –

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தேவாலயமொன்றில் துப்பாக்கிக்காரன் ஒருவன் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். அந்நேரத்தில் வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த ஒருவர் அந்த துப்பாக்கிக்காரனைச் சுட்டுக் கொன்றார்.
இந்த பரபரப்பான சம்பவம் ஃபோர்ட் வெர்த் எனும் நகருக்கு அருகில் வைட் செட்டில்மெண்ட் எனும் இடத்தில் உள்ள வெஸ்ட் ஃபிரீவே தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் நடைபெற்றது.

தேவாலயத்தின் பிரார்த்தனை மண்டபத்திற்கு வந்த துப்பாக்கிக்காரன் அங்கு ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் மற்றொருவரைப் பற்றி விசாரித்துள்ளார். அந்நபரும் மண்டபத்தில் அமர்ந்திருந்த ஒருவரைத் துப்பாக்கிக்காரனிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
உடனடியாக, அந்த துப்பாக்கிக்காரன் தன்வசம் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு மண்டபத்தில் அமர்ந்திருந்த நபரைச் சுட்டான். அதன் பிறகு, அவரை அடையாளம் காட்டிய நபரையும் சுட்டான்.

அந்நேரத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்த ஒருவர் துப்பாக்கிக்காரனை நோக்கி சுட்டு அவனைக் கீழே வீழ்த்தினார். துப்பாக்கிக்காரனைச் சுட்ட ஆடவர், தேவாலயத்தின் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தவர் ஆவார். அச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தக்க நேரத்தில் துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொல்லப்படாதிருந்தால் பலரை அவன் கொன்று குவித்திருக்கலாம் என்று வைட் செட்டில்மெண்ட் மாவட்ட காவல்துறையின் தலைவர் ஜேபி பெவரிங் தெரிவித்தார்.

தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை சமூக ஊடகத்தில் நேரடியாக ஒளியேற்றப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அச்சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுடப்பட்ட மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் இறந்து விட்டதாக அங்கு அறிவிக்கப்பட்டது. அச்சம்பவத்தில் மேலும் இருவர் லேசாக காயமுற்றனர். துப்பாக்கிக்காரனின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.

துப்பாக்கிக்காரன் சுடப்பட்ட வேளையில், அங்கிருந்த மேலும் சிலர் தங்களின் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவனைச் சுடுவதற்கு முன்னேறி வரும் காட்சி காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுள் யாராவது அவனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்களா என்பது தெரியவில்லை.
துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பிரார்த்தனை மண்டபத்தில் குழுமியிருந்த வழிபாட்டாளர்கள் பீதியில் அலறினர்.

துப்பாக்கிக்காரன் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொள்வதைக் கண்ட தேவாலய பாதுகாப்புக் குழுவினர் அவன் மீது கண் வைத்தபடி இருந்தனர். இருந்த போதிலும் அதனையும் மீறி துப்பாக்கிச் சுடு நடந்துள்ளது. ஆனால், பாதுகாப்புக் குழுவினர் மட்டும் உடனடியாகச் செயல்படாதிருந்தால் பலரை அவன் கொன்று குவித்திருக்கலாம் என்று அந்த தேவாலயத்தின் பாதிரியார் ஜேக் கம்மிங்ஸ் குறிப்பிட்டார். துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ள பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களுக்குத் துப்பாக்கிகளைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கும் சட்டம் கடந்த செப்டம்பர் மாதத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் நடப்புக்கு வந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version