Home Hot News சம்பள மானியத் திட்டம்

சம்பள மானியத் திட்டம்

1.  சம்பள மானிய (உதவி)த் திட்டம் (Subsidi Upah) என்றால் என்ன?

i) ஒரு நிறுவனம் அதன் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யாமல் தொடர்ந்து அவர்களை வைத்திருப்பதற்கு முதலாளிகளுக்கு உதவும் அரசாங்கத் தின் முயற்சிதான் சம்பள மானியத் திட்டமாகும்.

ii) கோவிட்-19 நோய்த்தொற்று பரவி வருவதால் அதன் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள மோசமான இழப்புகளில் இருந்து சற்றே நிவாரணம் பெறுவதற்கு உதவுவதாகும். மேலும் தொழிலாளர்களை வேலையில் இருந்து நிறுத்தாமல் தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கும் இந்த மானியம் உதவும்.

iii) தொழிலாளர்கள் வேலை இழந்து அதனால் வருமானத்தையும் இழப்பதை இத்திட்டம் தவிர்க்கும்.

2.  இந்தச் சம்பள உதவித் திட்டம் எப்போது அமலுக்கு வரும், எப்போது முற்றுப்பெறும்?

* 2020 ஏப்ரல் 1 முதல் இந்தச் சம்பள உதவித் திட்டம் அமலுக்கு வருகிறது.

* 2020 ஏப்ரல் 1 தொடங்கி 3 மாதங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும். அல்லது விண்ணப்பம் செய்யப் பட்ட மாதத்தில் இருந்து தொடங்கும்.

 * சம்பள உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்குரிய இறுதிநாள் 2020 செப்டம்பர் 15.

3.  2020 ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சம்பள உதவித் திட்டத்தில்  இடம்பெற்றுள்ள சிறப்பு அம்ங்சகள் யாவை?

* 2020, ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சம்பள உதவித் திட்டம் 2020 மார்ச் 27-  ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைவிட கூடுதல் சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. கீழ்க்காணும் அட்டவணையைக் காண்க:

4.  சம்பள மானியத்திற்கு விண்ணப்பம் செய்யத் தகுதி பெறாதவர் யார்?

* பெர்கேசோவின்  (PERKESO) தொழிலாளர் காப்புறுதித் திட்டத்தில் (SIP) இன்னமும்     பதிவு செய்திராத அல்லது சந்தா செலுத்தாத முதலாளி மற்றும் தொழிலாளி;

* இதே தொழிலாளி அந்த மாதத்தில் பொருளாதார மீட்சி – ஊக்குவிப்புத் திட்டத்தின்         உதவியைப் பெற்றிருந்தால்;

* மாதம் 4,000 ரிங்கிட்டிற்கும் கூடுதலாகச் சம்பளம் வாங்கும் தொழிலாளி;

* வேலையில் இருந்து நின்றுவிட்ட தொழிலாளி;

* அரசாங்கத் துறை, அரசு சார்பு நிறுவனங்கள், ஊராட்சித் துறைப் பணியாளர்கள், அந்நியத் தொழிலாளர்கள், வணிக அதிகாரிகள்;

* முதலாளி அல்லது நிறுவனம் இன்றி சுயமாக வேலை செய்கின்றவர்கள், ஃபிரிலான்ஸ் பணியாளர்கள்;

* அந்நியத் தொழிலாளர்கள், வணிக அதிகாரிகள். (வெளிநாட்டவர்கள்)

5.  சம்பள உதவித் திட்ட விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?

i) தொழிலாளர் பெயர்ப்பட்டியல் (தொழில் அளவில் தகுதி பெற்றவர்கள்.)

ii) நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரம் (பேங்க் கணக்கறிக்கையின் முதல் பக்க நகல்)

iii) வர்த்தகப் பதிவு எண் Business Registration Number – BRN) வங்கியில் கணக்குத் திறக்கும்போது சமர்ப்பிக்கப்பட்டது.

iv) SSM, ROS, ROB நிபுணத்துவ, அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அங்கீகாரம், வணிக லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்கள்.

v) PSU 50 பிரகடன ஒப்புதல் சான்றிதழ்.

vi) வருமான கணக்கறிக்கை அல்லது விற்பனை விவரங்கள் அடங்கிய பட்டியல் போன்ற கூடுதல் ஆவணங்கள். இவை சம்பந்தப்பட்ட துறையினரின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

குறிப்பு: 76 அல்லது அதற்கும் கூடுதலான எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு / தொழிலுக்கு மட்டும் கூடுதல் ஆவணங்கள் (vi).தேவை.

6.  வர்த்தகப் பதிவு எண் (BRN) தகவல்களை வங்கித் தரப்பில் இருந்து பெற வேண்டும் என்பது ஏன்?

* நிறுவன வங்கிக் கணக்குத் திறக்கும்போது சமர்ப்பிக்கப்படும் வணிக லைசென்ஸ் எண்தான் இந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்கு.

* www.prihatin.perkeso.gov.my அகப்பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் BRN‡ பாரத்தை நிறுவனங்கள் – முதலாளிகள் பூர்த்திசெய்து முழுமையான நகல்களுடன் இதே அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* மின்னியல் நிதி பட்டுவாடா Electronic Fund Transfer-EFT)  வழி முதலாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதி உதவி செலுத்தப்படுவதற்கு வங்கிக் கணக்கு மற்றும் BRN தகவல்கள் அவசியமாகின்றன.

7.  PSU50 பிரகடன ஒப்புதல் என்பது என்ன?

* சம்பள உதவித் திட்டத்திற்கான விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதைப் பிரகடனம் செய்வது அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது ஆகும். எழுத்துப்பூர்வமாக இது இணைக்கப்பட வேண்டும்.

8.  பெர்கேசோவில் மாதாந்திர சந்தா செலுத்தி வருகின்ற நிலையில் மாதம் 4,000 ரிங்கிட்டிற்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளி இந்தச் சம்பள உதவித் திட்டத்தில் இடம்பெறாதது ஏன்?

* பி40 பிரிவைச் சேர்ந்த மாதம் 4,000 ரிங்கிட்டிற்கு குறைவாகச் சம்பளம் வாங்கும் தொழிலாளிக்குக் கூடுதல் அனுசரணையாக இந்தச் சம்பள உதவித்திட்டம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கோவிட்-19 பாதிப்புகளால் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு உதவிசெய்யும் நோக்கத்தில் PRIHATIN என்ற பரிவு பொருளாதார மீட்சி திட்டத்தின் கீழ் அரசாங்கம் சம்பள உதவித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அட்டவணை 1: கூடுதல் சிறப்பம்சங்களுடன் சம்பள உதவித் திட்டம் (6.4.2020)

9.  தொடர்ந்து அடுத்த மாதத்திற்கான சம்பள உதவித் திட்டத்திற்கு மனுசெய்யும்போது முதலாளி அல்லது நிறுவனம் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமா?

* அவசியம் இல்லை. இரண்டாவது, மூன்றாவது மாதங்களுக்குப் புதிய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. இருப்பினும் தொழில் – வணிக அந்தஸ்தில் ஏற்படும் மாற்றங்கள், தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களை மட்டும் சரிசெய்வது கட்டாயமாகும். மாற்றங்கள் பற்றிய தகவல்களைச் சமர்ப்பிக்காத நிறுவனங்கள் / முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

10.  2020, ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னர் செயல்படத் தொடங்கிய ஒரு            நிறுவனம் ஆனால் பெர்கேசோவில் பதிவுபெறாத நிலையில் சம்பள உதவித்திட்டத்திற்கு மனுசெய்ய முடியுமா?

* முடியும். ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும்.

i) 2020 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னர் எஸ்எஸ்எம், ஊராட்சித் துறை, நிபுணத்துவ, அறிவியல், தொழில்நுட்ப ஙே்வைகள் அமலாக்கப் பிரிவில் பதிவு செய்திருக்க வேண்டும்.

ii) குறைந்தபட்ங்ம் ஒரு தொழிலாளரையாவது கொண்டிருக்க வேண்டும்.

iii) சம்பள உதவித்திட்டத்திற்கு மனு செய்வதற்கு முன்பு பெர்கேசோவில் பதிவு பெற்று சந்தா செலுத்திவிட வேண்டும்.

11.  ERP பெறுகின்ற நிறுவனங்கள் / முதலாளிகள் சம்பள உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியுமா?

* முடியும். அட்டவணை 1 (கேள்வி 3) கீழ் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றியிருந்தால் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

* அதேசமயத்தில் ERP உதவி பெற்ற மாதத்திலேயே சம்பள உதவித் திட்டத்திற்கும்          விண்ணப்பம் செய்ய முடியாது.

12.  2020, மார்ச் 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சம்பள உதவித் திட்ட அறிவிப்புக்குப் பின்னர் இதற்கு மனு செய்து விட்ட முதலாளி, 2020 ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சம்பள உதவித் திட்டத்தில் பங்கேற்பதற்கு மறுபடியும் விண்ணப்பம் செய்ய முடியுமா?

* முடியும். 2020, மார்ச் 27 அறிவிப்புக்கு ஏற்ப 100-க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனம் விண்ணப்பம் செய்திருக்கும் பட்சத்தில் 200 தொழிலாளர்களுக்கும் மேற்போகாத எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டிருந்தால் புதிய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யலாம். (அட்டவணை 1, கேள்வி 3 நிபந்தனைகளைப் பின்பற்றவும்).

13.  76 அல்லது இதற்கும் கூடுதலான எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் வருமானம் அல்லது விற்பனை 50 விழுக்காடு அல்லது அதற்கும் கூடுதலாக வீழ்ச்சி கண்டிருப்பதை எப்படி நிரூபிக்க வேண்டும்?

* 2020 ஜனவரியில் இப்படி ஒரு சரிவைக் கண்டிருக்கும் நிறுவனம் ஆதார ஆவணங்களைக் கொண்டு அதனை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அடுத்த மாதங்களின் வருமானத்தையும் விற்பனை அளவையும் ஒப்பீடு செய்து அறிக்கையை இணைக்க வேண்டும்.

14.  இலாகா, பிரிவு, கிளை, யுனிட் என்று பல்வேறு பகுதிகளைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தொழிலாளர்களைத் தேர்வுசெய்து அந்தப் பெயர்ப்பட்டியலைக் கொண்டு சம்பள உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியுமா?

* முடியும். அத்தொழிலாளர்கள் உள்நாட்டவர்களாக இருக்க வேண்டும். மாதச் சம்பளம் 4,000 ரிங்கிட் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

15.  சம்பள உதவித் திட்டத்திற்கு நிறுவனம் ஜூன் மாதம்தான் விண்ணப்பம் செய்கின்ற நிலையில் பின் தேதியிடப்பட்டு ஏப்ரலில் இருந்து உதவித்தொகை கிடைக்குமா அல்லது ஜூன் மாதத்தில்தான் தொடங்குமா?

* பின் தேதியிடப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பம் கிடைக்கப்பட்ட மாதத்தில் இருந்துதான் உதவித்தொகை வழங்கப்படும்.

16.  சம்பள உதவி தொகைக்கு விண்ணப்பம் செய்யாத ஒரு நிறுவனம், எந்த நேரத்திலும் அதன் தொழிலாளர்களை வேலையில் இருந்து நிறுத்தலாமா?

* முடியும். இருப்பினும் 1955 தொழிற்சட்டம், 1967 தொழில்துறை உறவுகள் சட்டம் ஆகிய மலேசிய தொழிலாளர் சட்டங்களில் வரையறுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

17.  சம்பள உதவித் திட்டத்தில் பங்கேற்பதற்குரிய ஒரு தகுதி நிபந்தனையானது ஒரு நிறுவனம் அதன் தொழிலாளர்களை 6 மாதங்களுக்குத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதாகும். இந்நிலையில் ஒரு தொழிலாளி சுயவிருப்பத்தின்பேரில் நின்றுவிட்டால் அந்நிறுவனம் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமா?

* அவசியம் இல்லை. சம்பள உதவி பெறும் முதல் 3 மாதங்களில் ஒரு தொழிலாளி சுயவிருப்பத்தின் பேரில் வேலையில் இருந்து நின்றுவிட்டால் அந்த விவரத்தை மட்டுமே தெரிவிக்க வேண்டும். இதனைச் செய்யாதபட்சத்தில் சட்ட நடவடிக்கையை அந்நிறுவனம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

18.  சொந்தமாக இந்தச் சம்பள உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும் உரிமை ஒரு தொழிலாளிக்கு உண்டா?

* உரிமை இல்லை. முதலாளி மட்டுமே இந்தச் சம்பள உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

* அதேசமயத்தில் ERP  பெறும் அதே மாதத்தில் தொழிலாளி சார்பில் நிறுவனம் சம்பள உதவி நிதியைக் கோர முடியாது.

19.  2020, மார்ச் 27 அறிவிக்கப்பட்ட சம்பள உதவித் திட்டத்தில் மானியம் கேட்டு ஒரு நிறுவனம் விண்ணப்பம் செய்துவிட்டது. அதே நிறுவனம் 2020 ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உதவித் திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பம் செய்யலாமா?

* முடியும். 2020 மார்ச் 27-ஆம் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து 100-க்கும் மேற்போகாத தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனம் விண்ணப்பம் செய்திருக்கும் பட்சத்தில் 2020, ஏப்ரல் 6 அறிவிப்புக்குப் பின்னர் 200-க்கும் மேற்போகாத எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் பெயர்ப்பட்டியலை இணைத்து புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இதற்கான நிபந்தனை அட்டவணை 1 கேள்வி 3-இல் இடம்பெற்றுள்ளது.

20.  76 மற்றும் அதற்கும் கூடுதலான எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் 50 விழுக்காடு அல்லது அதற்குக் கூடுதலான வருமானம் – விற்பனைச் சரிவை எப்படி நிரூபிக்க வேண்டும்?

* அடுத்தடுத்த மாதங்களோடு ஒப்பிடுகையில் 2020 ஜனவரியில் வருமானம் மற்றும் விற்பனைச் சரிவைத் தகுந்த ஆதார ஆவணங்களைக் கொண்டு நிறுவனம் நிரூபிக்கலாம்.

21.  தன்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை ஒரு நிறுவனம் எப்படி தெரிந்துகொள்ளலாம்?

* மின்னஞ்சல் (இமெயில்) வழி தெரிந்துகொள்ளலாம்.

* அதேசமயத்தில் பெர்கேசோவின் வலைத்தளமான https://eiscentre.perkeso.gov.my பக்கத்தில் தகுதிபெற்ற நிறுவனங்களின் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதில் ஒவ்வொரு நிறுவனத்தின் தொழிலாளர் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டிருக்கும்.

22.  ஒரு தொழிலாளியின் 4,000 ரிங்கிட் அல்லது இதற்குக் குறைவான சம்பளத்தை எப்படி மதிப்பீடு செய்வது?

* 1969 தொழிலாளி சமூகப் பாதுகாப்பு சட்டத்தில் (சட்டம் 4) சம்பள அல்லது வருமான மதிப்பீடு வரையறுக்கப் பட்டிருக்கிறது. ஒரு தொழிலாளி பெறும் வருமானம் அடிப்படைச் சம்பளம், மிகை நேர ஊதியம், கமிஷன், ஆண்டு விடுமுறை, மருத்துவ, பிரசவ கால ஓய்வு, பொது விடுமுறை கால சலுகைகள், அனுகூல அலவன்ஸ், நன்னடத்தை வெகுமதி, ஓய்வூதியம், சேவைக் கட்டணம் என்று தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

23.  சம்பள உதவித் திட்டத்தில் பங்கேற்கும் நிலையில் ஒரு நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கும் வழிமுறை என்ன?

* பெர்கேசோவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சம்பளப் பட்டியலின் அடிப்படையில் அதே அளவில் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். சம்பள உதவி மானியமானது முதலாளி அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதி ஆகும்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்  சம்பளத்தின் அடிப்படையில் பெர்கேங்சோ மற்றும் தொழிலாளர் காப்புறுதி திட்டத்திற்கான சந்தா தொடர்ந்து சேலுத்தப்படுவதை முதலாளி அல்லது நிறுவனம் உறுதிசெய்திட வேண்டும்.

24.  ஒரு தொழிலாளி நிறுவனம் A மற்றும் நிறுவனம்  B-யில் வேலை செய்கிறார். பெர்கேசோ சந்தாவும் செலுத்துகிறார். இந்த இரண்டு நிறுவனங்களுமே சம்பள உதவித் திட்டத்தில் பங்கேற்பதற்குத் தகுதி பெறுகின்றனவா?

* தகுதி பெறுகின்றன. அட்டவணை 1 கேள்வி 3-இல் வரையறுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றி விண்ணப்பம் செய்யலாம்.

25.  மலேசியப் பிரஜைகள் மற்றும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் பெர்கேசோவில் இன்னும் பதியவில்லை. இப்போது பெர்கேசோவில் பதிந்துவிட்டு மலேசியத் தொழிலாளிகள் சார்பில் மட்டும் சம்பள உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியுமா?

* முடியும். விண்ணப்பம் செய்வதற்கு முன் பெர்கேசோவில் பதிந்துவிட்டு சந்தா செலுத்தியிருக்க வேண்டும். மலேசியப் பிரஜைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவர். இருப்பினும் விண்ணப்பத்தில் மலேசிய மற்றும் அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட வேண்டும்.

குறிப்பு: மலேசியப் பிரஜைகளின் எண்ணிக்கை  மற்றும்  அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வைத்துதான் ஒரு நிறுவனத்தின் செயல் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

26.  தொழிலாளர் காப்புறுதி திட்டம் (SIP), ERP திட்டம், சம்பள உதவித் திட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன?

27.  உதவித் தொகைக்கான நிபந்தனை – தகுதி பெறும் காலம்

பெர்கேசோ அங்கீகாரம் பெற்ற சம்பள உதவி மானியத்திற்கான விண்ணப்பம் அதனைப் பெறுவதற்குரிய தகுதியைப் பெறுகின்றது. நிபந்தனைகளுக்குட்பட்டு அதிகப்பட்சம் 3 மாதங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.

i) 200-க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு முதலாளி ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா 600 ரிங்கிட் வீதம் பெறுவார். இது 200 தொழிலாளர்களுக்கு மட்டுமே.

ii) 76 முதல் 200 தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் முதலாளி, ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா 800 ரிங்கிட் உதவித் தொகையைப் பெறுவார்.

iii) 75 மற்றும் அதற்கும் குறைவான எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் முதலாளி ஒவ்வொரு தொழிலாளிக்கும் 1,200 ரிங்கிட் சம்பள உதவி மானியம் பெறுவார்.

டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் பின்                                                            டத்தோ அஸிஸ் முகமட்                                                                                  நிர்வாகத் தலைவர் பெர்கேசோ

 

Previous articleமாநிலங்களிடையே பயணம் – இரவு நேரத்தில் அதிகமான வாகனங்கள்
Next articleபெட்டாலிங் ஜெயா சந்தை உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் ஊரடங்கு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version