Home மலேசியா அறிவுள்ள மக்கள் அறவழி பற்றுவர்

அறிவுள்ள மக்கள் அறவழி பற்றுவர்

மக்கள் இன்னும் பழைய பழக்கங்களில் இருந்து மீளவேயில்லை என்பதில் வருத்தமே மேலோங்கியிருக்கிறது. இதைத்தான் போலீசார் அடிக்கடி எச்சரித்து வருகின்றனர். அவர்களின் எச்சரிக்கையில் முதன்மையாக இருப்பது குழந்தைகளைப் பொது இடங்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என்பதுதான். இதில் மீறல்கள் ஏன்?

தொற்றுநோய்கள் குழந்தைகளை விரைவில் பற்றிக்கொள்ளும் என்பதால் போலீசாரின் கண்டிப்பு அதிகமாகவே இருக்கிறது. தவறு செய்கிறபோது போலீசாரின் தலையீடு இருப்பது இயல்பு. தவறு என்று தெரிந்தும் மீறுவது இயல்பானதல்ல. தவறு செய்தவர்களைக் கைது செய்வது போலிசாரின் பணி. கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் தவற்றைத் தவறு என்று தெரிந்தே செய்வதை இனி எந்தப்பட்டியலில் சேர்ப்பது?

குழந்தைகளை அழைத்துக்கொண்டு பொருள் வாங்கப்போன பேரங்காடியில், குழந்தைகளை அனுமதிக்க மறுத்தனர். மறுப்பது அவர்களின் கடமை. அப்போது குழந்தைகளை எங்கே விட்டுச்செல்வது என்பது தவித்தவர்களின் மடமை. அதனால்தான் காரில் நால்வர் பயணம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் பொருள் வாங்கும்போது பிள்ளைகளை யாரேனும் ஒருவர் பார்த்துக் கொள்ளவே நால்வர் அனுமதிக்கப்பட்டனர்.

கண்களை மூடிக்கொண்டு யாரும் உத்தரவு இடவில்லை என்பதை மக்கள் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணை ஏன் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அக்கட்டுப்பாட்டில் மாற்றங்கள் ஏன் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் தெரிந்துகொண்டால் புரிதலில் அர்த்தமுண்டு. இதைத்தான் முதன்மை அமைச்சார் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகிறார்.

குழந்தைகளுக்குத் தொற்று வந்தால் குடும்பத்தையே பாதிக்கும் என்கிறார் அவர். ஆதலால் குழந்தைகளைப் பேரங்காடிகளுக்கு அழைத்துச் செல்லாமல் இருப்பதே அறிவுடைய செயலாகக் கருத்தப்படுக்கிறது, குழந்தைகளைப் பேரங்காடிகளுக்கு அழைத்துச் செல்லும்போது தொற்று மட்டுமல்ல, அவர்களைக் கண்காணிப்பதும் மிகச் சிரமம். கூடல் இடைவெளி என்பது அவர்களுக்குத் தெரியாது.

கைது செய்யப்படும் வரை அடங்கோம் என்பது திமிரான செயலாகும். மற்றவர்களுக்கு அன்பாக இருக்க வேண்டியவர்கள் இடையூறு செய்வது முறையான பண்பாக இருக்கமுடியாது. கோரோனாவின் எண்ணிக்கை இன்னும் நம்பிக்கைத் தருவதாக இல்லை. இது பொறுபற்றத் தன்மையைக் காட்டுவதாக இருக்கிறது. திருந்துவதற்கும். திருத்துவதற்கும் மக்கள் அறியாமைப் பட்டியலில் இல்லை. சொன்னால் விளங்கிக்கொள்ளும் அறிவு அதிகமாகவே இருக்கிறது. இருந்தும் தூவானம் விடவில்லை!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version