Home மலேசியா கிள்ளானில் குவிந்துகிடக்கும் கள்ளக்குடியேறிகள்!

கிள்ளானில் குவிந்துகிடக்கும் கள்ளக்குடியேறிகள்!

நடவடிக்கை எடுக்கப்படுமா?

கிள்ளான் –

கோலாலம்பூர் செலாயாங் மொத்தச் சந்தை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சட்டவிரோதமாக குவிந்து கிடக்கும் அந்நியப் பிரஜைகளின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுவரும் குடிநுழைவு இலாகாவின் பார்வை கிள்ளான் பக்கமும் திரும்புமா என எதிர்பார்க்கப்படுகிறது.

கிள்ளான் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் எங்கிலும் குவிந்து கிடக்கும் கள்ளக் குடியேறிகளின் ஆதிக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. வடகிள்ளானைப் பொறுத்தவரையில் அது ஓர் அந்நியப் பிரஜைகளின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான நகரமாகவே காட்சியளிக்கிறது.

திரும்பும் திசையெல்லாம் வெளிநாட்டவரின் கடைகள், உணவகங்கள் உட்பட மளிகைக் கடைகள், கைப்பேசிக் கடைகள், தையற்கடைகள், அனைத்து வகைப் பொருட்கள் விற்கும் கடைகள் என எல்லா வகை வியாபாரங்களும் தனி ராஜ்யமாக அவர்கள் செய்து வருகின்றனர்.

1980ஆம், 90ஆம் ஆண்டுகளில் எழில்மிகு அழகு நகரமாக காட்சியளித்த இப்பகுதி இவர்களின் ஆக்கிரமிப்பால் தனது அழகையும் பொலிவையும் சுகாதாரத்தையும் இழந்த பகுதியாக வடகிள்ளான் காட்சியளிக்கிறது என சமூக சேவையாளரும் அமான் பெர்டானா குடியிருப்பாளர் சங்கத் தலைவருமான மணியம் அருணாசலம் தனது ஆதங்கத்தை மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.

வடகிள்ளானைத் தவிர்த்து மேரு காப்பார், கிளாங் உத்தாமா, பண்டமாரான், போர்ட்கிள்ளான் பகுதிகளிலும் அதிகமான அந்நியப் பிரஜைகள் சுதந்திரமாகத் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோவிட்-19 பாதிப்பு காலகட்டத்திலும் எந்தவொரு பயமுமின்றி சுற்றித் திரிகின்றனர்.

இவர்களின் நடவடிக்கை உள்நாட்டினருக்கு அச்சத்தைக் கொடுப்பதாகக் குறிப்பிட்ட மணியம், கிள்ளான் நகராண்மைக் கழகமும் காவல்துறையும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது போதுமானதாக இல்லை என்றே கருதப்படுகிறது.

பல குடியிருப்புப் பகுதிகளில் தங்கியிருப்போர் போதுமான சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காமல் ஒரே வீட்டில் பத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்டோர் தங்கி இருக்கின்றனர். அரசாங்கம் விதித்திருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கும் கூடல் இடைவெளிக்கும் தொடர்பு இல்லாமலே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான காலகட்டத்திற்கு ஆபத்தானவை என்பதாலும் அவர்கள் வழக்கமாக நம்மோடு கடைகள், மார்க்கெட், பேரங்காடிகள் போன்ற இடங்களில் நடமாடுவதும் ஆபத்தை விளைவிக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்.

கோலாலம்பூர் பகுதிகளில் கோவிட்-19 பாதிப்பால் அதிரடி நடவடிக்கை எடுக்கும் குடிநுழைவு இலாகா கிள்ளான் பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கும் வங்காளதேசிகள், மியன்மார், ரொஹிங்யா மக்கள், நேப்பாளிகள், இந்தோனேசியர்கள் போன்ற சட்டவிரோதக் குடியேறிகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு அவர்கள் மீது முழுமையான சோதனை நடத்தப்படுவதுடன் சுகாதார பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என தொழிலதிபருமான மணியம் கேட்டுக்கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version