Home உலகம் யாதும் ஊரே

யாதும் ஊரே

ஒருநாட்டின் மகிழ்ச்சியான மக்களுக்கு அடையாளமாகத் திகழ்வது திருநாள், பெருநாள் கொண்டாடங்கள் என்றால், அதில் நூறு விழுக்காடு உண்மை இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விளக்கங்கள் தேவையில்லை. அந்த மகிழ்ச்சியை அந்நாட்டு மக்களின் முகங்களே காட்டிவிடும்.

நல்ல முகத்திற்கு இனிமை சேர்ப்பது புன்னகை. புன்னகை நிரம்பிய முகத்தில் புண்கள் இருக்காது என்பார்கள். புண் என்பது மற்றவர்களைக் காயப்படுத்தும்  எண்ணம் என்றும் சொல்லலாம்.

நல்ல மனிதர்கள் உருவாக்கிய திருநாள் மக்களை ஒன்று திரட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளச் செய்வதாகும். இதைத்தான் திருநாள் என்றும் பெருநாள் என்றும் வகைப்படுத்தியிருக்கின்றனர். இது எல்லா நாளுக்குமான புதுப்பித்தல் என்பதிலும் தவறில்லை.

உலகமெங்கிலும் உள்ள மனிதர்களின் அமைப்பு ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறது. நிறத்தால், மொழியால் மட்டுமே மாறுபட்டிருக்கின்றனர். அவர்கள் வாழும் நிலைத்தன்மைக்கும் பருவநிலைக்கும் ஏற்ப உடை, பண்பாட்டுக்கூறுகள் மாறுபட்டிருக்கின்றன. அதற்கேற்ப கலாச்சாரங்களும் மாறுபட்டிருகின்றன.

இவையாவும் வெளித்தோற்றங்கள் தாம். குளிர்பிரதேசங்களில் வாழ்கின்றவர்களுக்கென்று உடைகள் இருக்கின்றன. அதுதான் கலாச்சார உடை. சாதாரண உடைகள் ஏற்புடையதாக இருக்க முடியாது. அவர்களுக்குத் தடித்த உடைகள் ஆச்சாரமானது. ஆச்சாரம் மரபானது.

இவற்றுக்கெல்லாம் அப்பால் மனிதனுக்கு இயல்பான குணங்கள் இருக்கின்றன. தோற்றமும் அதில் அடக்கம். இயல்பான குணம் என்பது மனிதனை மனிதன் அழித்துக் கொள்வதல்ல. அணைத்துக்கொள்வது.

அரவணைப்புதான் மனிதனின் உலகப் பண்பாக இருக்கும். அப்படியிருந்தால் அவன் மனிதன். இல்லையென்றால் திருவள்ளுவன் சொன்னதுபோல யாரோ என்பதாகத்தான் இருக்கும். இதற்காக சிந்தித்த மனிதன், திருநாளை உருவாக்கினான்  திரு சேர்ந்ததால் இறைவனை முதன்மையாக வைத்தான். தனக்கெனவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் பெருநாளை உருவாக்கினான்.

இதே எண்ணம் உலகின் எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. இது எப்படி ஏற்பட்டது. உள்ளங்கையில் மூன்று ரேகைகள் பொதுவானவை. உலகின் எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும் . உள்ளங்கையைப் பார்ப்பவர்களுக்கு உலகின் எந்த மனிதன் என்று தெரியாது. அதுபோலத்தானே எல்லா மனிதர்களுக்கும் ஒரே உள்ளம் என இருக்க வேண்டும்?

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பதின் அர்த்தத்தை வெளிப்படுத்த திருநாள் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாக்களாலும் மனிதம் புதுப்பிக்கப்படுகின்றன. பெருநாட்களால் இனங்கள் இணைக்கப்படுகின்றன.

சரவாக் ,சபா மக்களின் காவாய் தின திருநாள் அதைத்தான் சொல்கிறது. இது அறுவடைத்திருநாள் விழா. நல்லதை அறுவடை செய்வதால் இது நல்ல எண்ணத்திற்கான திருவிழா. இதை அறுவடை செய்கின்றவர்கள் நல்லவர்கள். விதைப்பதே முளைக்கும். முளைப்பது அறுவடையாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version