Home உலகம் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தம்: அடம்பிடிக்கும் சீனா

மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தம்: அடம்பிடிக்கும் சீனா

இந்திய- சீன எல்லையான லடாக்கில் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது என சீனா மீண்டும் கூறியுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

சீனா தரப்பிலும் 35 பேர் பலியாகி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய இந்த மோதலுக்கு சீனாதான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. லடாக் பிராந்திய எல்லையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக சீனா மீற முயன்றதாலேயே இந்த மோதல் ஏற்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நிலையில் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமானது என அந்த நாடு கூறியுள்ளது. இது தொடர்பாக சீன வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவிக்கையில்,கல்வான் பள்ளத்தாக்கு எப்போதும் சீனாவுடனேயே இருந்து வருகிறது. அங்கு எங்களுக்கு இறையாண்மை இருக்கிறது.

தற்போதைய நிலையில் எல்லை பிரச்சினையை தூதரக மற்றும் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் ஈடுபட்டு உள்ளது. ஒட்டுமொத்த எல்லை நிலவரமும் தற்போது நிலையாகவும், கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கிறது.

எங்கள் தரப்பில், எல்லையில் மேலும் மோதல் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லை பிரச்சினையில் உள்ள வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் களைந்து அங்கு அமைதியும், நிலைத்தன்மையையும் கொண்டுவர இந்தியாவும், சீனாவும் உறுதியுடன் இருக்கின்றன. வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட உலகின் மிகப்பெரிய நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தங்கள் வேறுபாடுகளைவிட பரந்துபட்ட நலன்களே முக்கியமாகும்.

இருநாட்டு தலைவர்களும் உருவாக்கி உள்ள ஒருமித்த செயல்பாட்டை இரு நாடுகளும் நிச்சயம் கடைப்பிடித்து, இருதரப்பு உறவுகளும் சரியான பாதையில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். சீனாவுடன் இந்தியா கடைசி வரை இணைந்து பணியாற்ற முடியும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version