Home மலேசியா சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் மாற்றங்கள் ஒரு இந்தியருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் கெஅடிலான் தொண்டர்கள் எதிர்ப்பார்ப்பு

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் மாற்றங்கள் ஒரு இந்தியருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் கெஅடிலான் தொண்டர்கள் எதிர்ப்பார்ப்பு

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்ற பேச்சு பலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் மாநில இந்தியர்களைப் பிரதிநிதித்து மேலும் ஒருவர் ஆட்சிக்குழுவில் இடம்பெற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற பேச்சு பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கெஅடிலான் கட்சியின் இந்தியத் தொண்டர்கள் இதற்கு பலமான ஆதரவை வழங்கும் வகையில் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தால் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ள வேளையில் சில மாநிலங்களும் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டு அக்கூட்டணியின் கீழ் ஆட்சியமைத்துள்ளன. டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தலைமையிலான சிலாங்கூர் மாநிலம் நம்பிக்கைக் கூட்டணிக்கு வழுவான ஒரு மாநிலமாக இருந்தாலும் இக்கூட்டணியில் இருந்து விலகிய பெர்சத்து கட்சியைச் சேர்ந்த செலாட் கிளாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஸிட் வகித்த ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியும் கெஅடிலான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினரான ஹனிஸா முகமட் தல்ஹா வகித்த ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியும் கெஅடிலானிலிருந்து விலகிய செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி வகித்த மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் பொறுப்பும் காலியாகி இருக்கின்றன.

கடந்த 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற பொதுத்தேர்தல்களின் பிரச்சாரங்களில் சிலாங்கூர் மாநிலத்தை நம்ம்பிக்கை கூட்டணி கைப்பற்றினால் இரு இந்திய பிரதிநிதிகளுக்கு ஆட்சிக்குழுவில் இடம்பெற வாய்ப்பு வழங்கப்படும் என நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை நம்பி வாக்களித்து வெற்றிப்பெறச் செய்தனர். ஆனால், நடந்தது என்ன ? 2018 இல் நடந்த தேர்தலுக்கு பின்னரும் மாநில இந்தியர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்ற கதைதான். இப்பொழுது வந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் கெஅடிலான் தொண்டர்கள் காத்திருப்பதாக மக்கள் ஓசையிடம் தெரிவித்தனர்.

கெஅடிலான் கட்சியைப் பொறுத்த வரையில் அதிகமான இந்தியர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர் என்பது கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ந்ன்றாக தெரியும். கட்சித் தேர்த்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் இந்தியர்கள் அதிகமாக திரண்டு வந்து வாக்களிக்கின்றனர். மலாய்க்காரர்களை அடுத்து இந்தியர்களே அதிக உறுப்பினர்களாக கெஅடிலானில் இணைந்துள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் மேலும் ஒரு இந்தியருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தெலோக் மெனெகோன் கெஅடிலான் தலைவர் கு.நல்லசாமி, கம்போங் ஜாவா கண்ணன், எம்.பி.மணிமாறன், குணா ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், கட்சிக்கு விசுவாசமாகவும் சிறந்த சேவையை தொகுதி மக்களுக்கு வழங்கி வரும் அவர், மாநில ரீதியிலும் பணியாற்ற ஒரு சந்தர்ப்பம் வழங்குவதோடு, சிலாங்கூர் மாநில இந்தியர்களின் பிரச்சினைகளை பொறுப்பில் இருக்கு வீ.கணபதிராவுடன் இணைந்து தீர்த்து வைக்கப்பாடுபடுவார் என கேட்டுக் கொண்டனர்.

மாநிலத்தில் மலாய்க்கார்களை பிரதிநிதித்து ஐவரும் ( பி.கே.ஆர். 3, அமானா 2 ) சீனர்களின் பிரதிநிதிகளாக மூவரும் ( ஜ.செ.க 2, பி.கே.ஆர். 1 ) இந்தியப் பிரதிநிதியாக ஜ.செ.கவைச் சேர்ந்த ஒருவரும் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் மாற்றம் வேண்டும் என இந்திய சமுதாயம் பல ஆண்டுகளாக எதிர்ப்பார்த்து வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மாற்றங்கள் வரும் என காத்திருக்கும் இந்திய சமுதாயத்திற்கு தொடர்வது ஏமாற்றமே.

கெஅடிலான் கட்சிக்கு விசுவாசமாக இருந்து வரும் இந்திய சமுதாயத்திற்கு இந்த சந்தர்ப்பத்திலாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா என வினவிய அவர்கள், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டத்தோஸ்ரீ அமிருடின் சாரி ஆகியோருடன் கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் கெஅடிலான் கட்சிக்காக இந்திய சமுதாயம் செய்துள்ள அர்ப்பணிப்புகளை சற்று சீர்தூக்கிப் பார்த்து டாக்டர் குணராஜ் ஜோர்ஜிக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பொறுப்பை வழங்குவதன் வழி நிவர்த்தி செய்யும் என எதிர்ப்பார்ப்பதாக கெஅடிலான் கட்சியின் தீவிர ஆதர்வளார்களான அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பி.ஆர்.ஜெயசீலன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version