Home Hot News அமெரிக்கா-சீனா பிணக்கு அனாவசியமா? அத்தியாவசியமா?

அமெரிக்கா-சீனா பிணக்கு அனாவசியமா? அத்தியாவசியமா?

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடந்த இரண்டு வருடங்களாக வர்த்தகப் போர் நிலவி வருகிறது. உலக மக்கள் மத்தியில் இந்தப் பிணக்கு அனாவசியமா அல்லது அத்தியாவசியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இவரை ஆளுமை நிறைந்த தலைவர் என அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கினர் என்றாலும் காலப்போக்கில் சரியான சண்டியர் என்பதுதான் டிரம்ப் மீது ஏற்பட்ட பிம்பமாகிப் போனது.

என்னதான் வேண்டும் டிரம்பிற்கு? சீனாவுடன் இவர் ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்?

பணம்தான் காரணம்.

அமெரிக்காவுக்கு வரவேண்டிய உள்நாட்டு வருமானத்தை சீனா எடுத்துக் கொள்கிறது என்ற காட்டம் டிரம்பிற்கு உள்ளது.

இதன் காரணமாக அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுத்ததன் விளைவு. இவ்வாண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி, முதல் கட்ட வர்த்தக உடன்படிகையில் வேறு வழியின்றி சீனா கையெழுத்து இட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் நடந்தேறியது. சீனா பணிந்து போனதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் தலையாய காரணம் சீனா மீது டிரம்ப் கொண்டு வந்த அட்டகாச வரிதான்.

சீனாவின் வர்த்தகம் வாயிலாக அமெரிக்காவுக்கு ஆண்டு ஒன்றுக்கு 419 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கறிய டிரம்ப் நான்கு முறை வருமான வரியை உயர்த்தினார்.

சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி ஆண்டுக்கு 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டபோது சீனா மூர்ச்சையாகிப் போனது.

தொடர்ந்து, அந்நாட்டு உற்பத்தியான ஹுவாவே விவேக கைபேசியை டிரம்ப் தடை செய்தார். இப்போது அமெரிக்கர்கள் கைகளில் இந்த கைபேசியே கிடையாது என்ற அளவுக்குக் கொண்டு வந்தார்.

பணிந்து போனால் தவிர காரியம் சாதித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்ட சீனா ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டது,

கையெழுத்துப் போட்டவுடன் முதல் கட்டமாக தடைகளை அகற்றி இறக்குமதி வரியை குறைத்துக் கொள்ளும்படி சீனா கோரிக்கை விடுத்தது.

டிரம்ப் அதனை நிராகரித்து விட்டார்.

இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்போது நிபந்தனைகளை தளர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் மொத்த அமெரிக்க ஏற்றுமதி ஆண்டுக்கு 540 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு என்றால் 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரியாக விதிக்கப்படுவதை இன்றளவும் சீனா விரும்பவில்லை.

ஆயினும், ஒப்பந்தம் வாயிலாக மேலும் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெருமானமுள்ள பொருட்களை சீனா ஏற்றுமதி செய்து கொள்ள முடியும் என்பது அந்நாட்டுக்குக் கிடைத்த ஆறுதல் செய்தி.

இந்தக் கூடுதல் ஏற்றுமதி முலம் சீனாவின் இறக்குமதி வரி 47 விழுக்காடாக குறைந்து போகும். ஆனால் டிரம்ப் கணக்குப்படி அமெரிக்காவுக்கு தொடர்ந்து அதே 350 பில்லியன் அமெரிக்க டாலர் இறக்குமதி வரியிலிருந்து கொஞ்சமும் குறையாமல் கிடைத்து விடும்.

அமெரிக்க ஏற்றுமதி என்பது சீனாவின் முக்கிய வருவாய் என்பதால் அந்நாடு இவ்விவகாரத்தில் அமைதி காத்துக் கிடக்கிறது. ஆயினும் அமெரிக்காவுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்து பொருளாதாரத்தில் ஆட்டம் கொடுக்க வேண்டும் என்பது சீனாவின் மனக்கணக்கு.

அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலையால் சீனாவின் ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டு விடும் என்பது சீனாவின் கணக்கு.

சீனா கேட்கும் வரியைக் குறைத்து விட்டால் அமெரிக்கா வலுவிழந்ததாக அர்த்தமாகி விடும். இது அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் டிரம்பின் செல்வாக்கை குறைத்து விடும்.

இது தெரிந்த டிரம்ப் தொடர்ந்து வரி குறைப்பு விவகாரத்தை தன் கைக்குள்ளேயே வைத்து அரசியல் நடத்தி வருகிறார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version