Home ஆன்மிகம் செல்வம் செழிக்கும் குபேர கலசம் வழிபாடு

செல்வம் செழிக்கும் குபேர கலசம் வழிபாடு

குபேரன்

எம்பெருமான் ஈசனிடம் அளப்பரிய பற்று கொண்டவர் குபேரன். எந்த சுயநலமும் இன்றி ஈசனே சரணாகதி என்று கடும் தவம் மேற்கொண்டவர். இவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் உலகத்து செல்வத்துக்கெல்லாம் அதிபதியாக குபேரனை நியமித்தருளினார். வடக்கு திசைக்கு அதிபதியாகி அஷ்ட திக் பாலகர்களில் ஒருவராக விளங்கினார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.

புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.

குபேர பானை அல்லது குபேர கலசம்

மஹாலக்ஷ்மிக்கு துணையாக பொறுப்பேற்றார். இவரை வணங்குவதனால் செல்வ வளம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். இவை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். குபேர பானை அல்லது குபேர கலசம் என்று அழைக்கப்படுகின்ற பானையை என்ன செய்ய வேண்டும்? எப்படி இருக்கும்? அதில் என்ன போட்டு வைக்க வேண்டும்? அதனால் என்ன நன்மைகள் ஏற்படும்? என்பதை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

குபேர பானை என்பது மண்ணால் செய்யப்பட்ட மூன்று அடுக்கு சிறிய மட்பாண்டங்கள் கொண்ட கலசம் ஆகும். அதற்கு அழகிய வண்ணம் தீட்டி வைக்கலாம். உங்களுக்கு தெரிந்த அழகிய வேலைபாடுகள் செய்தும் வைக்கலாம். இதில் முதல் பானை பெரிய அளவிலும், அதற்கு அடுத்த இரண்டாவது பானை அதனை விட சிறிய அளவிலும், மேல் உள்ள பானை சிறியதாகவும் இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக அழகாக அடுக்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

இக்கலசத்தின் முதல் பானையில் அரிசி நிரப்பி வைக்க வேண்டும். இரண்டாவது பானையில் துவரம் பருப்பு நிரப்பி வைக்க வேண்டும். மேலுள்ள மூன்றாவது சிறிய பானையில் கல் உப்பு அல்லது நாணயங்கள் நிரப்பி வைக்க வேண்டும்.

வியாழக்கிழமை குபேர பூஜையின் சிறப்புகள்

குபேர பானையை பூஜை அறையின் வடக்கு திசையில் கிழக்கு பார்த்தபடி வைக்கலாம். குபேரனின் திசை வடக்கு என்பதால் வடக்கில் வைப்பது சிறந்தது. அதுபோல குபேரனின் கிழமை வியாழக்கிழமை என்பதால் வியாழக்கிழமை அன்று தவறாமல் அக்கலசத்திற்கு தீபம் காட்டுவது நல்ல பலன்களை நல்கும்.

பொதுவாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் முக்கியத்துவம் பெற்ற நாளாக இருக்கும். குபேர பானை வைத்திருப்போர் வியாழக்கிழமை அன்றும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அதிலும் பூச நட்சத்திரம் வரும் வியாழக்கிழமை அன்று வழிபடுவதால் மிகச்சிறந்த பலன்களை பெற்றுத் தரும். ஏனெனில் குபேரன் பிறந்த நட்சத்திரம் பூசம் ஆகும்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்று அதில் இருக்கும் அரிசி, பருப்பு, உப்பு, நாணயங்களை மாற்றி புதிதாக நிரப்பி வைக்க வேண்டும். பவுர்ணமி என்று இல்லை முக்கிய விரத தினங்கள், இறையருள் கொண்ட நல்ல நாட்களில் கூட மாற்றிக் கொள்ளலாம் தவறில்லை. வாரமிருமுறை மாற்றுவது நல்லது. இல்லையெனில் அதில் வண்டுகள் வந்துவிடும்.

பானையை அரித்து விடாமல் இருப்பதற்கு சிறிய பிளாஸ்டிக் பைகளில் போட்டும் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் புதிதாக மாற்றும் பொழுது முன்னர் இருந்த அரிசி, பருப்பு வகைகளை பறவைகளுக்கு தீனியாக போடலாம் அல்லது பிறர் கால் படாத இடத்தில் கொண்டு போய் போட்டுவிடலாம். நீர் நிலைகளில், செடிகளில் கூட போடலாம். அதிலிருக்கும் நாணயங்களை நீங்கள் எப்பொழும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம் அல்லது உண்டியலில் சேர்த்துவிடலாம். நீங்கள் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது அந்த கலசத்திற்கும் தீபம் காட்டி வழிபடலாம்.

குபேர பூஜை நன்மைகள்

மேலும் லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் பொழுது இந்த கலசத்தை வைத்து வழிபடலாம். இதனால் குபேரனின் அருளும் திருமகளான மகாலக்ஷ்மியின் அருளும் ஒருசேர நமக்கு கிடைக்கும். செல்வ வளம் பெருகும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். உணவு பொருட்களுக்கு பஞ்சமின்றி நம்முடைய குலம் வாழும். சகல ஐஸ்வர்யங்களும் இல்லம் தேடி வந்தடையும்.

நாம் என்னதான் வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி உழைத்துக் கொண்டிருந்தாலும் இறையருள் இல்லை எனில் அந்த செல்வமானது நம்மிடம் நிலைப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் நம்மால் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே இறைவன் மீது நம்பிக்கை வைத்து முழு ஈடுபாட்டுடன் வழிபடுவதால் சகல செல்வங்களும் பெற்று மனநிம்மதி அடையலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version