Home உலகம் பயன்பாட்டுக்கு வருமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி?

பயன்பாட்டுக்கு வருமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி?

உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் சுமார் 1.75 கோடி பேரை பாதித்து இருக்கிறது. 6.67 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால்தான் தடுப்பூசி எப்போது வரும் என்று உலகமே ஏக்கத்துடன் காத்துக் கிடக்கிறது.
பாரத் பயோடெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்ஷீல்டு, ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி, ரஷ்ய நாட்டின் பாதுகாப்புத்துறை சார்பில் இயங்கும் கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பூசி என பல தடுப்பூசிகள், மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பலத்த போட்டியில் இருக்கின்றன.
இந்நிலையில், கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பூசி மற்றவற்றை முந்திக்கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு விரைவாக வந்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் புளூம்பெர்க் செய்தியின்படி, இந்த தடுப்பூசி ஆகஸ்டு 10-12ம் தேதிகளுக்குள் பதிவு செய்யப்பட்டு விடும் என தெரிகிறது.
இந்த தடுப்பூசியை கட்டுப்பாட்டாளர்கள் பதிவு செய்து 3 அல்லது 7 நாட்களுக்குள் அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆகஸ்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசி வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி, இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெற்றிகரமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில்தான் அதன் முதல் கட்டம் முடிந்துள்ளது. இரண்டாவது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பது கடந்த 13-ம் தேதி தொடங்கி உள்ளது என ‘டாஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஒரு தடுப்பூசி 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொண்ட பின்னர்தான் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். இதுதான் வழக்கமான நடைமுறை. இது பல மாதங்களுக்கு செல்லும்.
ஆனால் இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனையை முன்கூட்டியே முடித்துக்கொண்டு, இந்த தடுப்பூசியை மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு முன்பாகவே மக்கள் பயன்பாட்டுக்கு விட்டுவிடுவது என ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உளளன.
இதுபற்றி புளூம்பெர்க் செய்தியில், “கமலேயா தடுப்பூசி ஆகஸ்டு மாதத்தில் நிபந்தனை பதிவு பெற வாய்ப்பு உள்ளது. அதாவது, மூன்றாவது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும்கூட, இதன் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அதையடுத்து உற்பத்தி தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகள் முடியும் வரையில் தடுப்பூசி சுகாதார நிபுணர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும்” என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை (கோவிட்ஷீல்டு) இந்தியாவில் புனேயின் இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆகஸ்டு மாதத்துக்குள் மனிதர்களுக்கு செலுத்திப் பார்த்து பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான திட்ட முன்மொழிவை பார்த்த நிபுணர்கள் குழு அதில் திருத்தங்களை செய்யுமாறு கேட்டுள்ளது, இதனால் அந்த குழு ஒப்புதல் அளிப்பது தள்ளிப்போகிறது,
இதனால் பரிசோதனையை நடத்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் எவ்வளவு காலம் காத்திருக்க நேரும் என்பது தெரியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version