Home மலேசியா போதைப்பொருள் விற்பனைக் கும்பலை போலீஸ் முறியடித்தது

போதைப்பொருள் விற்பனைக் கும்பலை போலீஸ் முறியடித்தது

சுங்கைபட்டாணி –

பல்வேறு இடங்களில் கடந்த ஆகஸ்டு 20ஆம் தேதி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 70,000 வெள்ளிக்கு அதிகமான போதைப்பொருட்களை கடத்திய கும்பல் ஒன்றை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஆடவர்கள் 29 வயது, 34 மற்றும் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர் என கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் அட்லி அபு ஷா கூறினார். இவர்கள் கெடா, கோலமூடா மாவட்டம் மற்றும் பினாங்கு செபெராங் பிறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சுங்கைபட்டாணி தாமான் பெருடா குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டு வாசலில் 35 வயது ஆடவரை போலீசார் முதலில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆடவரிடமிருந்து 720 கிராம் கொண்ட சாபு வகை போதைப்பொருளைக் கைப்பற்றினர். காரின் ஓட்டுநர் பகுதியில் அந்த ஆடவர் அதை மறைத்து வைத்துள்ளார் என அவர் கோலமூடா மாவட்ட காவல் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணி முதல் 2 மணிக்குள் பினாங்கு மற்றும் செபெராங் பிறை வட்டாரத்தில் மறைந்திருந்த ஆடவர்களையும் போலீசார் கைது செய்தனர். அந்த இரண்டாம் நபரிடமிருந்து 1.05 கிலோகிராம் எடை கொண்ட 42,320 வெள்ளி மதிப்புடைய சாபு போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.

சுற்று வட்டாரப் பகுதிகளில் உணவு விநியோகிப்பாளரான அந்த இரண்டாம் நபர் போதைப்பொருளையும் விநியோகித்துள்ளார். விநியோகிப்பின்போது ஒவ்வொரு கிலோ கிராமிற்கும் 5 ஆயிரம் வெள்ளிக்கு அந்த நபர் வருமானம் பெறலாம் என தாம் நம்புவதாக அட்லி அபு ஷா தெரிவித்தார்.

இதனிடையே மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து போதைப்பொருட்கள் எதையும் போலீசார் கைப்பற்றவில்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர் தாம் ஒரு போதைப் பொருள் விநியோகிப்பாளர் என்பதை ஒப்புக்கொண்டதாக சொல்லப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபட்டவர்கள் ஆவர். முதலில் கைது செய்யப்பட்ட ஆடவரின் சிறுநீர் பரிசோதனையின்போது மெத்தாம் பெத்தமின் வகையான போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தது தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் ஆகஸ்டு 27ஆம் தேதி வரையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version