Home Hot News மறுசுழற்ச்சி பொருட்களை கொண்டு உருவானது 21.61 அடி உருவ சிலை – சுதந்திர தினத்தில் சாதனை

மறுசுழற்ச்சி பொருட்களை கொண்டு உருவானது 21.61 அடி உருவ சிலை – சுதந்திர தினத்தில் சாதனை

ரவாங், செப். 2-

பல வகையான மறுசுழற்ச்சி பொருட்களை கொண்டு 21.61 அடியில் டாக்டர் உருவச் சிலையை மலேசிய பொது சமூக நல இயக்கத்தினர் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கோவிட் 19 கிருமி தொற்றிலிருந்து உலகம் முழுமையிலும் மக்களை காப்பாற்றி வரும் முன்னணி பணியாளர்களின் தியாகங்களுக்கு தலைவணங்கும் வண்ணம் இந்த டாக்டர் உருவச் சிலை உருவாக்கப்பட்டதாக இயக்கத்தின் தோற்றுநர் மாரிமுத்து நாகப்பன் தெரிவித்தார்.

 

அதுமட்டுமின்றி கடந்த 17ஆண்டுகளாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த இயக்கம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த சிலை உருவாக்கப்பட்டது. மொத்தம் 1,720 காலி டின்கள், 526 போட்டல்கள் மற்றும் பசைகளைக் கொண்டு இச்சிலை உருவாக்கப்பட்டது.

இயக்கத்தின் 10 உறுப்பினர்களின் முயற்சியில் கடந்த ஜூலை 26ஆம் தேதி இச்சிலையின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இது முற்றிலும் புதிய முயற்சி என்பதால் மூன்று முறை சிலை இடிந்து விழுந்தது. பசையை முறையாக ஒட்ட வைக்காததால் மழை, வெயிலுக்கு சிலை விழுந்தது. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வேலைகளை செய்து கடந்த ஆகஸ்டு 28ஆம் தேதி சிலை முழுமையாக உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

சுதந்திர தினத்தன்று இச்சிலையை அதிகாரப்பூர்வமாக திறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் குண்டாங்கில் அமைந்துள்ள இயக்கத்தின் அன்பு இல்லத்தில் சிலை திறப்பு விழா கண்டது. மலேசிய சாதனை புத்தக அமைப்புலிருந்து வந்தவர்கள் இயக்கத்தினருக்கு சான்றிதழ் வழங்கி கெளரவித்தனர்.

சன்வே வட்டாரத்தை மையமாக கொண்டு செயல்படும் இந்த இயக்கத்தில் நாடு முழுமையிலும் 400 உறுப்பினர்கள் இருக்கின்றனர். பிறப்பு பத்திரம், அடையாள் அட்டை, சமூக நல விஷயங்கள் போன்ற பிரச்சினைகள் உடையவர்களுக்கு இயக்கத்தின் சார்பில் உதவிகளை வழங்கி வருகிறோம். இயக்கத்தின் தலைவராக அஷ்வின் மாரிமுத்து செயல்படுகிறார்.

சிலை திறப்பு விழாவில் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், மலேசிய ஊழல் தடுப்பு அறவாரியத்தைச் சேர்ந்த முகமட் நிஸாம் இசா, தொழிலதிபர் டத்தோ தட்சனாமூர்த்தி மலேசிய நாட்டியாஞ்சலி ஆர்ட்ஸ் அகடமியின் தோற்றுநர் நிஷா கோகிலா ஆகியோருடன் 150க்கும் அதிகமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version