Home விளையாட்டு உலகின் நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிச் தகுதி நீக்கம்

உலகின் நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிச் தகுதி நீக்கம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் ஆடிய நோவக் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உலகின் நம்பர் 1 வீரரை தகுதி நீக்கம் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாப்லோ கரேனோ பஸ்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டின் போது சர்வ் ஒன்றைத் தோற்று ஜோகோவிச் 5-6 என்று பின் தங்கினார். இதில் சற்றே வெறுப்படைந்த ஜோகோவிச் பந்தை மட்டையால் கொஞ்சம் வேகமாகவே பின் பக்கமாக வெறுப்பில் அடிக்க அது அங்கு நின்று கொண்டிருந்த பெண் லைன் நடுவரின் தொண்டையைத் தாக்கியது, நடுவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

உடனே ஜோகோவிச் அவர் அருகே சென்று அவருக்கு உதவினார், தேற்றினார். ஆனால் யுஎஸ் ஓபன் தொடர் ரெஃப்ரி சோரம் ஃப்ரீமெல் மைதானத்த்துக்குள் விரைந்து வந்தார். ஆட்ட நடுவர் ஆரிலி டூர்ட்டிடம் பேசினார், கிராண்ட் ஸ்லாம் கண்காணிப்பு அதிகாரி ஆண்டிரியாஸ் எக்லியும் உடனிருந்தார்.

யுஎஸ் ஓபன் அதிகாரிகளுக்கும் நோவக் ஜோகோவிச்சுக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. நோவக் ஜோகோவிச் தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை தெரியாமல்தான் நடந்து விட்டது மன்னிக்கவும் என்றார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் விதிகள் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராகச் சென்றன. கடைசியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அவர் பரிதாபமாக தன் கிட் பேக்கை எடுத்து கொண்டு வெளியேறினார்.

எதிர் வீரர் பஸ்டா அதிர்ச்சியில் உறைந்தார். 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவு முடிந்தது.

இதற்கு முன்பாக 1995-ம் ஆண்டு விம்பிள்டனில் பிரிட்டன் வீரர் டிம் ஹென்மன் இதே காரணத்துக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

யுஎஸ் ஓபனிலிருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் யுஎஸ் ஓபனில் அவர் எடுத்த தரவரிசைப் புள்ளிகளை இழக்கிறார். மேலும் அபராதத் தொகையையும் ஜோகோவிச் செலுத்த வேண்டும்.

மேலும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் புறக்கணித்ததால் இன்னொரு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

நோவக் ஜோகோவிச் தடை குறித்து கருத்துக் கூறிய அனைவருமே வேறு வழியில்லை, ஜோகோவிச் தன் விதியை சந்தித்துதான் ஆக வேண்டும், விதிமுறைகள் அப்படி என்கின்றனர்.

சம்பவத்துக்குப் பிறகு ஜோகோவிச் இறுகிய முகத்துடன் தன் கருப்பு டெஸ்லா காரில் பறந்தார். யுஎஸ் ஓபனில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது, ஜோகோவிச்சின் செர்பிய ரசிகர்களுக்கு தகுதி நீக்கம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version