Home சினிமா திரைப்பட தயாரிப்பாளருக்கு சம்மன்

திரைப்பட தயாரிப்பாளருக்கு சம்மன்

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இந்த நடிகைகளின் செல்போன்களைப் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, கடந்த மாதம் 27-ம் தேதி திடீரென நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளரான கரிஷ்மா பிரகாசின் மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை போட்டனர். இந்த சோதனையில் 1.8 கிராம் கஞ்சா சிக்கியதாகக் கூறப்பட்டது. மேலும், கஞ்சா செடியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 2 பாட்டில் எண்ணெய்யும் சிக்கியது.
இதையடுத்து கரிஷ்மா பிரகாசை கடந்த மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஆனால் அதன்படி அவர் அன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கரிஷ்மா பிரகாஷ் மும்பையில் இல்லை என்று அவரது வக்கீல் கூறினார். இதையடுத்து, வரும் 10-ம் தேதி கரிஷ்மா பிரகாஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதேபோல், போதை பொருள் வழக்கு ஒன்றில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவின் மனைவியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு முன் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.  அதில் 10 கிராம் மாரிஜுவானா என்ற போதை பொருள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
இந்நிலையில், போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலா விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version