Home இந்தியா லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா- சீனா ஒப்புதல்

லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா- சீனா ஒப்புதல்

இந்தியா -சீனா வீரர்களுக்கு இடையே லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் பலியானார்கள். இதன் காரணமாக போர் பதட்டம் ஏற்பட்டதால் எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்தன.
கடந்த செப்டம்பர் மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய-  சீன வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசினார்கள். அப்போது எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்தன. அதன் அடிப்படையில் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 6-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது எல்லையில் இரு நாடுகளின் வீரர்களும் கட்டுப்பாட்டுடன் நடக்க உடன்பாடு எட்டப்பட்டது. மேலும் லடாக் எல்லையில் 3 கட்டங்களாக படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
முதல் கட்டமாக இரு நாடுகளின் ராணுவங்களும் ஒரே நாளில் டாங்கிகள், கவச வாகனங்களை எல்லைக் கோட்டில் இருந்து வாபஸ் பெற வேண்டும்.
2-ம் கட்டமாக லடாக் பான்காங் ஏரியின் வடக்கு கரை பகுதியில் நாள்தோறும் 30 சதவீத படை வீரர்களை இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்க செய்ய வேண்டும்.
இந்திய வீரர்கள் தான்சிங் தாபா நிலைக்கும், சீன வீரர்கள் பிங்கர் 8 நிலைக்கும் திரும்பி செல்ல வேண்டும்.
3-ம் கட்டமாக பான்காங் ஏரியின் தெற்கு கரையில் முகாமிட்டுள்ள இரு நாடுகளின் வீரர்கள் அவரவர் பழைய நிலைகளுக்கு திரும்பி செல்ல வேண்டும். படைகள் முறையாக வாபஸ் பெறப்படுகிறதா என்பதை இரு தரப்பும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கலாம் என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய- சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இரு தரப்பு படைகளை வாபஸ் பெறுவது தொடர்பான திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version