Home இந்தியா மின்தடையால் செல்போன் டார்ச்சில் பிரசவம்

மின்தடையால் செல்போன் டார்ச்சில் பிரசவம்

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகா கொல்லூரு கிராமத்தை சேர்ந்தவர் சித்தம்மா. இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 10-ம் தேதி இரவு சித்தம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக கொல்லூரு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தம்மா அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினம் இரவு 11 மணியளவில் கொல்லூரு கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மின்தடை ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த இன்வெட்டரும் பழுதானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகளை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்கள் யாரும் செல்போனை எடுத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும் பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் நர்சு நாகேஷ்வரி மட்டும் தான் பணியில் இருந்துள்ளார். அதே நேரத்தில் பிரசவ வலியால் சித்தம்மாவும் துடித்துள்ளார்.
இதையடுத்து, நர்சு நாகேஷ்வரியே சித்தம்மாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். இதற்காக ஆஸ்பத்திரி ஊழியர்கள், தன்னுடைய செல்போன் என ஒட்டுமொத்தமாக 4 செல்போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்துவிட்டு, அந்த வெளிச்சத்தில் சித்தம்மாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் மறுநாள் (11-ம் தேதி) அதிகாலை 4 மணியளவில் சித்தம்மாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் பெண்ணுக்கு வெற்றிகரமாக செல்போன்களின் டார்ச் லைட் மூலமாக பிரசவம் பார்த்த நர்சு நாகேஷ்வரிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கலபுரகி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் குடும்ப நலத்துறை ராஜேஸ்வரியும், நர்சு நாகேஷ்வரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version