Home Uncategorized வீரம் செழிக்க விதகள் செய்க

வீரம் செழிக்க விதகள் செய்க

இன்றைய பதின்ம வயதினர் மிகவும் துணிச்சலானவர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இளங்கன்று பயமறியாது என்பார்கள் .இந்த வார்த்தையின் ஆழம் அறிவியலோடும் கலந்திருக்கிறது.

பயமாக இல்லையா உனக்கு என்று ஒரு மாவீரனிடம் கேட்டதற்கு, பயமா? அப்படியென்றால் என்னவென்று கேட்டதாக ஒரு கதை உண்டு. இதுபோலத்தான் நம்மினத்து இளம் நெப்பொலியன்களும் பயமின்றித்திரிகிறார்கள், செயல்படுகிறார்கள்.

இவர்களின் துணிச்சல் அலாதியானதுதான். ஆனால், அத்துணிச்சலும் பயமின்மையும் பயனுள்ளதாக இருக்கின்றனவா? அப்படியில்லையே! கெட்டுப்போகிறார்கள் என்ற வார்த்தைகளால் மட்டுமே அர்ச்சிக்கப்படுகின்றனர்.

நெடும்சாலைகளில் , இரு சக்கரங்களின் சாகசங்கள் அலாதியானது. ஆனால்,விவேகமிக்கதா என்பதில் சுழியம்தான் மிஞ்சுகிறது. இவர்களின் வீர தீரச்செயல்கள் எவ்வகையில் பார்த்தாலும் பயனற்றைவையாகவே போய்விடுகின்றன.

இதை விழலுக்கிறைத நீர்  – என்ற உவமானத்திற்கு ஒப்பிடலாமா? உண்மைதான். வீரதீர விளையாட்டுகளுக்கு தளமும் களமும் இருக்கின்றன. அவற்றைப்பயன் படுத்தாமல் பொதுச்சாலைகளை பொறுப்பற்றுப் பயன் படுதுகின்றவர்களாகவே இன்றைய பதின்ம வயதினர் ஆளாகிவருகின்றனர்.

இன்றைய இளையோர் விதிமுறைகளை மீறுவோராகவே இருக்கின்றனர் என்றால் தப்பும் தவறும் எங்கே உருவாகிறது  என்பது அறியப்படவேண்டும். விதிகள் மீறுவதற்கான விதிகள் முறைப்படுத்தப்படவில்லை என்பதும் ஒரு குறையாகத்தான் இருக்கிறது.

ஆபத்து என்பதை தெரிந்தும் அதை உணர்ந்துகொள்ளும் பக்குவம் ஊட்டப்படவில்லை என்பது பொதுக்கருத்தாக இருந்தாலும்  இதைத் தடுத்து நிறுத்தும், அல்லது திசை மாற்றும் மாற்று வழிகள் பற்றிச் சிந்திப்பார் யார் என்பதுபோலவே உணரப்படுகிறது. இது ஓர் உதாரணம் மட்டும்தான். இன்னும் நிறைய இருக்கின்றன. இதற்கெல்லாம் ஒட்டுமொத்த பெயர் இருக்கிறது. 

திருந்தாத ஜென்மங்கள் என்று பொதுவான வார்த்தைகளால் அர்ச்சிக்க்படுகின்றனர். அர்ச்சிக்கும் முன் பொதுவான விளையாட்டுகள் மீது ஆர்வம் காட்டும் வழிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றனவா என்பது பற்றியும் சிந்தித்திருந்தால் வாய்மொழி வக்கணையாக விழுந்திருக்காது.

சாலை வட்டதிற்குள் சுற்றிவரும் வாகனங்கள் போல் சுற்றி வரும்போதெல்லாம் அரசின் விளையாட்டுதுறை அக்கறையின்றி இருப்பதுபோலவும் தெரிகிறது. அதோடு மாநில விளையாட்டுத்துறைகளும் அப்படியே முடங்கிப்போய் கிடப்பதுபோலவே தெரிகின்றன.

கோவிட் -19 என்பது ஒரு காரணமாக் இப்போது இருக்கிறது. அதனால் செயல்படவே கூடாது என்பது அர்த்தமல்ல. ஆயத்தமாக இல்லை என்பதே சரியானதாக இருக்கிறது.

விளையாட்டுதுறைகளுக்கு வீரியம் ஊட்டப்படாதவரை விவேகம் என்பது இளைய சமுதாயத்தினரிடம் காண்பது அரிதாகிவிடும். 

விளையாட்டுத் திடல்கள் இல்லாத தாமான்கள் அதிகரித்துவிட்டன். நீச்சல் குளங்கள் அறவே  இல்லாமை அதிகரிதுவிட்டன. பேருக்கு குட்டி விளையாட்டரங்குகளில் தனி ஆதிக்கங்கள்  ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. 

எண்ணிக்கையில் சிலர் மட்டுமே விளையாடுவதைக் காணமுடிகிறது என்றால் மற்றவர்களுக்குகான களம் எங்கே? 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் சரியானதா?

–  எழுத்து :கா. இளமணி

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version