Home Hot News அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் ஆடவர் மரணம்

அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் ஆடவர் மரணம்

மும்பை: முகேஷ் அம்பானி வீட்டின் முன் கார் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த கார் உரிமையாளரின் உடல் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவில் டாப் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள இவரது வீட்டின் முன், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முன் வெடிகுண்டுகள் நிறைந்த எஸ்யுவி கார் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் டாப் பணக்காரர் வீட்டின் முன்பே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். கார் உரிமையாளர் ஹிரென் மன்சுக் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், 45 வயதான ஹிரென் மன்சுக்கின் உடல், உயிரிழந்த நிலையில் மும்பை அருகே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தானே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக, அவர் மாயமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். அவரது மரணம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது.

அமைச்சர் அனில் தேஷ்முக்

இது குறித்து மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், ‘முகேஷ் அம்பானி வீட்டின் முன் கண்டுபிடிக்கப்பட்ட காரின் உரிமையாளர் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், அவர் அந்த காரின் உண்மையான உரிமையாளர் இல்லை. அவர் அந்த காரை பராமரித்தே வந்தார். அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்படுகிறது. இந்த விசாரணை பயங்கரவாதிகள் தடுப்பு படைக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார்.

பாஜக வலியுறுத்தல்

முகேஷ் அம்பானி வீட்டின் முன் காரில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தேசியப் பாதுகாப்பு முகமைக்கு மாற்ற வேண்டும் என்றும் மகாராஷ்டிர பாஜக வலியுறுத்தியுள்ளது. அன்று காலை முதல் மும்பை நகரில் அந்த எஸ்யுவி சுற்றியதாகவும், அந்த கார் பின்னால் இன்னோவா கார் ஒன்று இருந்ததாகவும் அந்த கார் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜெலட்டின் குச்சிகள் & சிசிடிவி காட்சிகள்

அந்த காரில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. அவை ராணுவ கட்டுமானம், சுரங்கம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வணிக தரத்தில் இருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அருகில் இந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரில் இருந்து வெளியேறுவதைக் கண்டறிந்தனர். இருப்பினும், அவர் யார் என்பதைக் காவல் துறையினரால் உறுதி செய்ய முடியவில்லை.

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version