Home உலகம் ஐந்தரை ஆண்டுகளாக ராய்பூர் விமான நிலையத்தில் விமானம்

ஐந்தரை ஆண்டுகளாக ராய்பூர் விமான நிலையத்தில் விமானம்

– காரணம் என்ன

அயல் நாட்டு விமானம் ஒன்று, ஐந்தரை ஆண்டுகளாக இந்தியாவில்  விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் என்ன ஆகும்?

விமானத்தின் பார்க்கிங் வாடகை

ராய்ப்பூர் விமான நிலையத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பங்களாதேஷ் பயணிகள் விமானம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.

அதைப் பராமரிப்பவரும் எவரும் இல்லை. போதாததற்கு இதற்குப் பார்க்கிங் வாடகையாக வேறு ஒன்றரை கோடி ரூபாய் பாக்கி உள்ளது.

ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்த் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள  இந்த விமானத்தை விற்று இதன் பார்க்கிங் கட்டணமான சுமார் ஒன்றை கோடி ரூபாயைச் செலுத்துவதாக பங்களாதேஷின் யுனைடெட் ஏர்வேஸ் உறுதியளித்துள்ளது.

இதற்காக யுனைடெட் ஏர்வேஸ் ஒன்பது மாத கால அவகாசம் கோரியுள்ளது.

யுனைடெட் ஏர்வேஸின் இந்த விமானம் கடந்த 68 மாதங்களாக (ஐந்தரை ஆண்டுகள்) ராய்ப்பூர் விமான நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறது, இரு நாடுகளிடையே கடிதப் பரிமாற்றங்கள் தொடர்ந்து இருந்தபோதிலும், இந்த விமானத்தை அப்புறப்படுத்துவதோ, ராய்ப்பூர் விமான நிலையத்திற்கு பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்துவதோ நடக்கவேயில்லை.

ராய்ப்பூர் விமான நிலைய இயக்குநர் ராகேஷ் சஹாய் பிபிசியிடம், “நிறுவனம் தனது விமானத்தை விற்று, நிலுவையில் உள்ள பணத்தைச் செலுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்துள்ளது. அவர்களின் இந்தத் திட்டத்தை நாங்கள் சட்டத் துறைக்கு அனுப்பியுள்ளோம். சட்டத் துறையின் கருத்துக்குப் பிறகுதான் எந்த முடிவும் எடுக்கப்படும். ” என்று கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்நிறுவனத்திற்கு ஐம்பது முறைக்கு மேல் இ-மெயில் அனுப்பப்பட்டுவிட்டது என்றும் ஆனால் அந்நிறுவனம் விமானத்தை அகற்ற ஆர்வம் காட்டவுமில்லை ராய்ப்பூர் விமான நிலையத்தின் நிலுவைத் தொகையை செலுத்தவுமில்லை என்று ராகேஷ் சஹாய் கூறுகிறார்.

வங்க தேச விமானம்

ஒவ்வொரு முறை பதிலளிக்கும் போதும், ​​பங்களாதேஷ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவே அந்நிறுவனம் கூறிவந்தது.

இதற்குப் பிறகு, நிறுவனத்திற்கு சட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டபோது தான் சுமார் 1.54 கோடி நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த அவகாசம் கோரி பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக யுனைடெட் ஏர்வேஸ் அதிகாரிகளை தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

வங்க தேச விமானம் இந்தியா வந்தது எப்படி?

பங்களாதேஷின் யுனைடெட் ஏர்வேஸின் இந்த மெக்டொனால்ட் டக்ளஸ் எம்.டி – 83 விமானம் ராய்பூர் விமான நிலையத்தில் ஆகஸ்ட் 7, 2015 அன்று அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்தது.

இந்த விமானத்தில் 173 பேர் இருந்தனர், இது பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து மஸ்கட்டுக்குப் புறப்பட்ட சிறிது நேரத்தில், வாரணாசி மற்றும் ராய்பூர் விமானநிலையத்தின் இடையே, ​​அதன் ஒரு இஞ்சினில் தீப்பிடித்தது.

இந்த விமானத்தில் JT8D-200 இன் இரண்டு என்ஜின்கள் இருந்ததாகவும் ஒரு என்ஜின் செயலிழந்த பிறகு மேற்கொண்டு பறக்க முடியவில்லை என்றும் இதனால், விமானம் அவசர அவசரமாக ராய்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியது என்றும் ராய்பூர் விமான நிலைய அதிகாரிகளின் கூறுகிறார்கள்.

கொல்கத்தா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை, இது குறித்து ராய்பூர் விமான நிலையத்திற்குத் தகவல் கொடுத்தது. உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் சேதமடைந்த என்ஜினின் ஒரு பகுதி விமான ஓடுதளத்தில் இறங்கும் முன்னரே, காற்றில் பறந்து விழுந்தது. ஆனால் விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. “

இதில் பயணம் செய்த பயணிகளுக்காக, யுனைடெட் ஏர்வேஸ் மறுநாள் ஒரு சிறப்பு விமானத்தை அனுப்பியது, ஆகஸ்ட் 8 இரவு அனைத்துப் பயணிகளும் ராய்பூரிலிருந்து அனுப்பப்பட்டனர்.

விமான ஊழியர்களும் பங்களாதேஷ் திரும்பினர், ஆனால் விமானம் மட்டும் ராய்ப்பூர் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.

விரைவில் கொண்டு செல்ல உறுதி

அவசரகாலத்தில், விமானம் தரையிறங்கிய 24 நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷைச் சேர்ந்த யுனைடெட் ஏர்வேஸ் அதிகாரிகள் ராய்பூர் வந்து, என்ஜினை மாற்ற அனுமதி கோரி சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்திற்கு விண்ணப்பித்தனர்.

இதன் பின்னர், இந்த அதிகாரிகளும் பங்களாதேஷுக்கு திரும்பினர்.

ராய்ப்பூர் விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம், “ராய்பூர் வந்த யுனைடெட் ஏர்வேஸ் அதிகாரிகள், பதினைந்து நாட்களுக்குள் விமானத்தின் என்ஜின் பழுதுபார்க்கப்பட்டு, விமானம் பங்களாதேஷுக்குக் கொண்டு செல்லப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் இந்த உறுதி வெறும் காற்றாய்க் கரைந்தது.” என்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2015 க்குப் பிறகு, யுனைடெட் ஏர்வேஸுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. ஆனால் ஏர்வேஸ் அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி ராய்பூர் வருவதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தனர்.

பிப்ரவரி 2016 இல், யுனைடெட் ஏர்வேஸின் நான்கு உறுப்பினர்கள் குழு ராய்பூர் வந்தது. சாலை மார்க்கமாகக் கொண்டு வரப்பட்ட என்ஜின் மாற்றவும்பட்டது என்று ஆவணங்கள் கூறுகின்றன.

இதன் பின்னர், தொழில்நுட்ப உறுப்பினர்கள் பிப்ரவரி 17 அன்று ராய்ப்பூரிலிருந்து திரும்பினர்.

மூடுவிழா கண்ட நிறுவனம்

இதற்கிடையில் யுனைடெட் ஏர்வேஸ் விமானி ஒருவர் விமானத்தைப் பரிசோதித்து அது பறக்கத் தகுதியாக இருப்பதாக அறிந்தார்.

ஆனால் இந்த விவகாரம் பங்களாதேஷ் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் சிக்கிக்கொண்டதனால், விமானி, பிப்ரவரி 28, 2016 அன்று ராய்பூரிலிருந்து வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது.

தொழில்நுட்பக் குழு , விமானி திரும்பிய பின்னர், விரைவில் இந்த விமானத்தின் பிரியாவிடைக்கான வழி திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விமானி திரும்பிய ஒரு வாரத்திற்குள், பங்களாதேஷின் யுனைடெட் ஏர்வேஸ் 6 மார்ச் 2016 அன்று தனது வர்த்தகத்தை மொத்தமாக நிறுத்திக்கொண்டது. 2005 ஆம் ஆண்டில், கேப்டன் தஸ்பீருல் அகமது சவுத்ரி நிறுவிய நிறுவனத்தின் சிறகுகள் உடைந்தன.

ராய்ப்பூர் விமான நிலைய அதிகாரிகள் இதற்குப் பிறகும் நம்பிக்கை இழக்கவில்லை. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடியாவிடினும், குறைந்தபட்சம் இந்த விமானத்தை நிறுத்துமிடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

பார்க்கிங் விவகாரம்

தற்சமயம், ராய்ப்பூர் விமான நிலையம், எட்டு விமானங்களை நிறுத்தும் திறன் கொண்டது. இதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பங்களாதேஷின் இந்த விமானம் ஆக்கிரமித்து வரும் சூழல் உருவானது.

நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, தொடர் மின்னஞ்சலுக்குப் பிறகு, விமான நிறுவன உதவி மேலாளர் இனாயத் ஹுசைன், ஜூலை 20, 2018 அன்று ராய்பூர் வந்தார். அவர் முன்னிலையில், விமானம் ராய்பூர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டது.

“2015 ஆம் ஆண்டில், இந்த விமானம் ராய்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ​​நாங்கள், மணிக்கு 320 ரூபாய் பார்க்கிங்க் கட்டணம் என்று கணக்குப் போட்டோம். பின்னர் அது மாதக்கணக்கானது. இப்படியே இப்போது வருடக்கணக்கில் வந்து நிற்கிறது. இப்போது ராய்ப்பூர் விமான நிலையத்திற்கு பார்க்கிங் கட்டணம் என்று ஒன்று கிடைக்குமா என்றே தெரியவில்லை. இந்த 48 மில்லியன் டாலர் விமானத்தின் தலையெழுத்து நன்றாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது.” என்று ராய்ப்பூர் விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

இருப்பினும், விமானத்தைப் பழுதுபார்த்த பிறகு மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் ஆனால் பல ஆண்டுகளாக நிற்பதால், பழுதுபார்க்கும் பணிகள் அதிகம் செலவு பிடிக்கும் என்றும் விமான நிபுணர் ராஜேஷ் ஹாண்டா கூறுகிறார்.

இது தவிர, விற்பதானாலும் அது மிகக் குறைவான விலையே பெறும் என்று அவர் கூறுகிறார். இத்தகைய விமானங்களைப் பொதுவாக மற்ற விமான நிறுவனங்களே வாங்கும் என்றும், பழுதுபார்த்த பிறகு அதைப் பயன்படுத்த முடிந்தால் அவை பயன்படுத்துகின்றன அல்லது உதிரி பாகங்களைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மேலும் கூறும் ராஜேஷ் ஹாண்டா, “பல ஆண்டுகளாக, ஒரு கார் வெறுமனே நின்று கொண்டிருந்தால், அதன் இயங்கும் தகுதி மற்றும் சந்தை மதிப்பில் ஏற்படும் தாக்கம் விமானத்திற்கும் பொருந்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, கொரோனாவுக்குப் பிறகு, சந்தையின் நிலை மந்தமாக இருக்கும் சூழலில், விமான நிறுவனத்திற்கு இது ஒரு பெரிய பாரமாகத்தான் இருக்கும்” என்கிறார்.

Previous articleகடுப்பான கிம்… மலேசாவுடனான தூதரக உறவை துண்டிப்பு:
Next articleடெஸ்லா தயாரிப்பு கார்களை உளவு பார்க்க பயன்படுத்தினால் நிறுவனத்தையே மூடி விடுவேன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version