Home இந்தியா பிரதமருக்கு வைரமுத்து முன்வைத்த கோரிக்கை!

பிரதமருக்கு வைரமுத்து முன்வைத்த கோரிக்கை!

 –தேசிய நூலாக திருக்குறளை அறிவிப்பீர்!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென பிரதமருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து வட அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், வட அமெரிக்கா தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பியிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இதில் இரு சிலைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கும் வழங்கப்பட உள்ளது.

சென்னை அடையாறில் இதற்காக நடைபெற்ற நிகழ்வில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விஜிபி ரவிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, இதுவரை பொருட்களை ஏற்றுமதி செய்துவந்த நாம், இப்போது அறிவை ஏற்றுமதி செய்கிறோம் என்றார். மேலும், குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட பிரதமர் திருக்குறளை மேற்கோள் காட்டும்போது மகிழ்ச்சியடைகிறோம் என்றும், தமிழன் என்று பெருமை கொள்கிறோம் எனவும் கூறிய வைரமுத்து, ஒட்டுமொத்த தமிழ் இனமும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க, பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திருக்குறளை யாருமே அங்கீகரிக்காத நிலையிலும், இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது, திருக்குறள் அதிகாரத்தைக் காப்பாற்ற ஆசைப்படவில்லை. அறத்தைக் காப்பாற்றவே ஆசைப்படுகிறது. இப்படிப்பட்ட திருக்குறளை ஏன் தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

முதலில் ட்வீட் போட்டது திருவள்ளுவர் தான் என்றும், இன்றைய ட்விட்டருக்கு மூலம் திருவள்ளுவர் எனவும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

கமெண்ட்: முகநூலுக்கும்  திருவள்ளுவரே  முன்னுதாரணம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version