Home இந்தியா தனித்த அடையாளம் எனது அடையாளம்

தனித்த அடையாளம் எனது அடையாளம்

 முகவரி என்பது சாதியல்ல- புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் பதவியேற்றது முதல் சில அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக உயர் அதிகாரிகளின் பணி மாற்றம் உள்ளது. இதில் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு ஐ.ஏ.எஸ் நியமிக்கப் பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் 41 ஆவது ஆட்சியராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்ட கவிதா ராமு ஐ.ஏ.எஸ், முன்னதாக மாநில ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

இந்நிலையில், அவரின் புதிய பொறுப்பு குறித்து, சமூக வலைதளங்களில் அவருக்குப் பல தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளைப் பரிமாறி வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கவிதா ராமு, தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், ‘என்னுடைய புதிய பொறுப்பு குறித்து பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறீர்கள். உங்களுக்கு அன்புக்கும், பாசத்திற்கும் நான் எப்போதும் கடமைப்பட்டவளாக இருப்பேன். அதேவேளையில் என்னை குறிப்பிட்ட சாதி அடையாளம் கொண்ட பக்கங்களோடு சிலர் என்னை டேக் செய்து இருந்தார்கள்.

என்னை முழுமையாக அறியாதவர்களுக்கு இதை சொல்ல நான் விரும்புகிறேன். சமூக மறுமலர்ச்சி இயக்கங்களுக்குப் பெயர் போன மாநிலத்தைச் சேர்ந்தவள் நான். சமூக நீதி கருத்துக்கள் என்னுள் ஆழப் பதிந்துள்ளது.

பெரியாரின் பகுத்தறிவு சீர்திருத்தச் சித்தாந்தங்களைக் கேட்டும், படித்தும் வளர்ந்தவள் நான். பெரியார் அறிவுறுத்திய சில கொள்கைகளை என் வாழ்க்கையில் செயல்படுத்துபவள். அதில் முக்கியமானது, சாதி எதிர்ப்பு. எனவே, எந்த ஓர் அடையாளத்திலிருந்தும் விடுபட்டு இருக்கும் என்னை, நீங்களும் அப்படியே பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன்.

அடையாளங்கள் சுமையாகிவிடுகின்றன. சில அடையாளங்கள் மனித இனத்துக்கு எதிராக அமையும் வண்ணம் உருவாக்கப் பட்டிருக்கின்றன. எனவே, நடனம் ஒன்றை மட்டுமே என் தனித்த அடையாளமாகச் சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்.

சக மனுஷியாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான பாதையில் என் சிறப்பான செயல்பாட்டைக் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘பெண்ணுரிமைப் போராளி, மாமேதை, சமூகப் போராளி, முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் ஆட்சியராகப் பணிபுரிவதைப் பெருமையாகக் கருதுகிறேன்’ என்று கூறியிருந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version