Home Uncategorized இலவசம் வியாபாரமாகலாமா?

இலவசம் வியாபாரமாகலாமா?

குறுக்கு வழிகள் எப்படி உண்டானது

இலவசமாகக் கிடைக்க வேண்டிய கோவிட்-19 தடுப்பூசி சொட்டு மருந்து வியாபாரமாக மாறியிருக்கும் தகவல் உச்சந்தலையில் இடி இறங்கியதுபோல் இருக்கிறது.

நாட்டு மக்கள் கோவிட்-19 தொற்று மீது கொண்டிருக்கும் உயிர் பயத்தைவிட சொட்டு மருந்து விற்பனை திடீர் நெஞ்சுவலியை ஏற்படுத்துவதாக உள்ளது. சொட்டு மருந்துகள் விற்கப்பட வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் வசம் எப்படிச் சென்றது?

கோவிட்-19 தடுப்பூசி மருந்துக்கு மலேசிய அரசாங்கம் கிட்டத்தட்ட 500 கோடி வெள்ளியை 2021 பட்ஜெட்டில் ஒதுக்கியது. அதுவும் போதவில்லை என்று கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.

நாட்டு மக்களுக்கு இலவசமாக கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது – போடப்பட்டும் வருகிறது. ஆனால், அந்தத் தடுப்பூசியைப் போடுவதற்கு உலக புத்ரா வாணிக மையம் உட்பட பல தனியார் இடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கான பணத்தை யார் தருவது? இங்கு பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் ரேலா உறுப்பினர்களுக்கான தொகை எங்கிருந்து வருகிறது? யார் தருவது?

புத்ரா உலக வாணிப மையம் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்காகச் சீரமைக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக இதற்குப் பெரும் பணம் செலவிடப்பட்டிருக்கும். எது எப்படி இருந்தாலும் இங்கு எவ்வாறான மருத்துவ வசதிகள் உள்ளன?

நாடு முழுவதும் அரசாங்க மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. பயிற்சிபெற்ற டாக்டர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்துவதற்கு என்ன தயக்கம்?

வார்டு, கட்டில், மருந்து, அவசர உதவி என்று எல்லா வசதிகளையும் கொண்டுள்ள இவற்றை எல்லாம் விட்டுவிட்டு தனியார் இடங்களில் கூடாரம் அமைத்து இவ்வளவு பெரிய பணியை மேற்கொள்வதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது?

முழு வீச்சில் செயல்பட வேண்டிய சுகாதார அமைச்சு என்ன செய்கிறது? விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது ஏன்?

விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சில் தொற்று நோய்க்கிருமி தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? 70 ஆண்டுகள் அனுபவமும் திறனும் பெற்ற சுகாதார அமைச்சு திடீரெனச் செயலிழந்து போனது ஏன்?

பணம் சம்பாதிப்பதற்கு இதுதான் வழியா? வெட்கமாக இல்லையா? 2 சொட்டு மருந்துக்கு 400 வெள்ளி என்பது எவ்வளவு பெரிய மோசடி? இது அரசாங்க பலவீனத்தின் எதிரொலியா?

எல்லாவற்றிலும் மேலான கொடுமையாகத் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு ஒரு டாக்டர் தேவை என்று விளம்பரம் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

என்னதான் நடக்கிறது? ஏன் இந்த அழிச்சாட்டியங்கள்? டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இக்கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அரசியலையும் சுயநலத்தையும் கடந்து நாட்டையும் மக்களையும் காக்க வேண்டிய அரசாங்கத்திற்கு இவ்வளவு பெரிய தடுமாற்றமும் தேவையும் இல்லை – அவசியமும் இல்லை.

தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து அனைத்தும் முறைப்படி நடந்திருந்தால் இன்றளவில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டு மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், நடப்பது எல்லாம் கேள்விக்குறியாகவே மாறிவருகிறது. கோவிட்-19 தொற்றுக் கிருமியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் தான் இருக்கிறது. மரண எண்ணிக்கையும் பீதியை ஏற்படுத்துகிறது.

சிலாங்கூரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையவே மாட்டேன் என்கிறது. ஏன்? புரியவில்லையே! இம்மாநிலத்தில் வாழ்கின்றவர்களும் மலேசியர்கள்தானே!

எண்ணிக்கைகள் பயமுறுத்தும் அளவில் இருப்பதால் எம்சிஓ நீக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அரசாங்கம் என்னதான் செய்யப் போகிறது?

 

 

– பி.ஆர். ராஜன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version