Home மலேசியா அநீதி இழைக்காதீர்?

அநீதி இழைக்காதீர்?

ஒப்பந்த மருத்துவர்கள் பாதிப்பு

குலசேகரன் கேள்வி

சுமார் 5 ஆண்டுகள் பல லட்சம் வெள்ளி செலவு செய்து மருத்துவப் படிப்பைப் பயின்று நாட்டிற்கு சேவை செய்யத் துடிக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கு அரசு வழங்கும் வாய்ப்பு மிகவும் நியாயமற்றதாக உள்ளது என்று ஈப்போ பாராட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

கோவிட்-19 நெருக்கடி காலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளும் அரசாங்கம் அவர்களின் நலனைப் பாதுகாப்பதில் ஏன் சுணக்கம் காட்டுகிறது என்று அவர் கேட்டார்.

2016ஆம் ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவப் படிப்பு முடிந்ததும் பயிற்சி மருத்துவர்களாக இ41 திட்டத்தின் கீழ் பணியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு ஆரம்பச் சம்பளமாக 2,900 வெள்ளியும் படித் தொகையாக 1,600 வெள்ளியும் சேர்த்து ஏறக்குறைய 4,500 வெள்ளி வழங்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் கட்டாயப் பயிற்சியை முடித்த பிறகு அவர்களுக்கான ங்ம்பளம் 700 வெள்ளி முதல் 1,000 வெள்ளி வரை கூடுதலாக உயர்த்தப்பட்டது.

இ44 திட்டத்தின் கீழ் இவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதன் பின் அவர்கள் நிபுணத்துவப் பயிற்சிக்காகவும் மேல் படிப்புக்காகவும் செல்வதென்றால் அதற்கும் அரசாங்கத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மற்ற சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இப்போதுள்ள திட்டத்தின் கீழ் மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் 2 வருடப் பயிற்சியை முடித்த பிறகு அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இ43 திட்டத்தின் கீழ் ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளாக வேலையைத் தொடர்கிறார்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் அவர்கள் அரசாங்கம் வழங்கும் வீட்டுக் கடனுக்கோ கார் கடனுக்கோ தகுதி பெறுவதில்லை. மேல்படிப்பும் தொடர முடியாது.

உம்ரா, ஹஜ்ஜு புனிதப் பயணத்திற்கும் சிறப்பு பேறுகால விடுமுறைக்கும் இவர்கள் தகுதி பெறவில்லை. அரசாங்க உபகாரச் சம்பளம் பெற்றவர்களுக்கும் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் படித்த மருத்துவ மாணவர்களுக்கும் இதே நிலைதான் என்று குலசேகரன் சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார இயக்கத்தின் நிர்ணயப்படி 500 பேருக்கு ஒரு மருத்துவர் எனும் இலக்கைத் தாண்டி மலேசியாவில் தற்போது 458 பேருக்கு ஒரு மருத்துவர் எனும் நிலை தோன்றியுள்ளது.

நாட்டில் போதுமான மருத்துவர்கள் உள்ளனர் என்றாலும் இவர்களின் சேவை மக்களை முழுமையாகப் போய்ச் சேர்வதில்லை என்பது உண்மை.

காரணம் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப போதுமான மருத்துவமனைகள் இல்லை. சிறு சிறு பட்டணங்கள் வளர்ச்சி அடைந்தபோது மக்கள் தொகை பெருகும் நிலையில் அதற்கு ஈடாக மருத்துவமனைகள் கட்டப்படுவதில்லை.

பல மருத்துவமனைகளில் மக்கள் மருத்துவரைக் காண பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. பல வேளைகளில் நோயாளிகள் காலை 6.00 மணிக்கெல்லாம் பதிவு செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதுமான மருத்துவர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் ஏன் திருப்திகரமான மருத்துவச் சேவையை நம்மால் வழங்க முடியவில்லை என்பது பற்றி அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்றும் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version