Home Uncategorized மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

 

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பதவி விலகுவாரா? பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழுமா? இன்றைய நிலையில் மலேசியர்கள் ஒவ்வொருவரும் அசைபோடும் செய்தியாக இக்கேள்விகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.

முஹிடின் – அவராகவே முன் வந்து விலகாவிட்டால் விலக்கப்படுவார். அதனையடுத்து அவரது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணக்காக இருக்கிறது.

தம்முடைய தலைமைத்துவத்திற்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி காண நேர்ந்தால், அடுத்து அவருக்கு உள்ள ஒரே வழி திடீர் பொதுத் தேர்தலுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் பரிந்துரை செய்வதுதான்.

பிரதமர் என்ற அதிகாரத்திற்கு உட்பட்டு பொதுத்தேர்தலுக்கு அவர் வழி வகுப்பாரேயானால் அதுவே மன்னிக்க முடியாததாகி விடும். மக்களின் கோபம் மேலும்  சூடுபிடிக்கும்.

மக்களின் உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் நாட்டைப் பிடித்துக் கடுமையாக உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடிமிக்க காலகட்டத்தில் 15ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் அவரை மன்னிக்கவே மாட்டார்கள்.

ஒவ்வொரு நாளும் இறந்தவர்களின் உடல்களை எண்ணுவதே உயிர் போராட்டமாக இருக்கின்ற நிலையில் ஓட்டுகளின் எண்ணிக்கையை எண்ணுவதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதை இன்றைய அவர்களது மனவோட்டங்கள் பிரதிபலிக்கின்றன.

கடந்த செப்டம்பரில் சபா மாநில சட்டமன்றங்களுக்கு திடீர்த் தேர்தல் நடத்திய பின்னர் நாட்டில் கோவிட்-19 கோரத் தாண்டவம் எவ்வளவு கொடூரமாக இருந்தது என்பதை பதவி மோகம் பிடித்த அரசியல் தலைவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் அதிகமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் இன்றளவும் மறக்கவில்லை – மறக்கவும் மாட்டார்கள்.
அந்த வேதனைத் தழும்பு மாறவே மாறாது.

இந்நிலையில் திடீர் பொதுத்தேர்தலை நடத்தி இன்னும் அதிகமான மலேசியர்களின் உயிர்களைக் காவு கொடுக்கப் போகிறோமா? மக்களின் பிணங்களின் மீது ஆட்சி நடத்தும் கொடூரத்தை அரசியல்வாதிகள் செய்யப் போகிறார்களா?

திடீர்ப் பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணத்தை டான்ஸ்ரீ முஹிடின் இன்னமும் மாற்றிக் கொள்ளவே இல்லை. கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்கு ஒரு முடிவு கட்டப்பட்டதும் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த நவம்பரில் அவர் அறிவித்திருந்ததையும் மறப்பதற்கில்லை .

2018, மே 9ஆம் தேதி நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன் 5 ஆண்டுகால தவணை 2023இல் நிறைவு பெறுகிறது. இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இதற்கு மத்தியில் 15ஆவது பொதுத்தேர்தலை நடத்துவதில் அப்படி என்ன அவசரம்?

பொதுத்தேர்தலை நடத்துவதன் மூலம் தாங்கள் விரும்பிய ஓர் அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை மக்களுக்குத் தருவோம் என்று கூறினார்.

மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்த ஓர் அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு ஒரு சதியால் ஆட்சியைக் கைப்பற்றியவர்களை மக்கள் மறந்து மன்னித்து விடுவார்களா என்ன ?

நாடாளுமன்ற பலத்தைப் பொறுத்தவரை பெரிக்காத்தான் நேஷனல் நூலிழையில்தான் ஆதரவைப் பெற்றிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனம் ஒரு கடிகாரத்தின் பெண்டூலம் போன்றது. எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம். ஆனால், மக்கள் மாற மாட்டார்கள் என்பது அவர்களது கோபத்தில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version