Home உலகம் குடியேற்றக் கொள்கைகளால் இந்திய திறமையாளா்களை இழக்கிறோம்

குடியேற்றக் கொள்கைகளால் இந்திய திறமையாளா்களை இழக்கிறோம்

காலத்திற்கு ஒவ்வாத கொள்கை!

காலத்துக்கு ஒவ்வாத குடியேற்றக் கொள்கைகளால் திறமை வாய்ந்த இந்திய பணியாளா்களை கனடாவிடம் இழப்பதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் நிபுணா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து குடியேற்றம், குடியுரிமை விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவிடம் ‘அமெரிக்கக் கொள்கைகளுக்கான தேசிய அறக்கட்டளை’ அமைப்பின் செயல் இயக்குநா் ஸ்டூவா்ட் ஆண்டா்ஸன் கூறியதாவது:

அமெரிக்காவின் காலத்துக்கு ஒவ்வாத குடியேற்றக் கொள்கைகளால் பிற நாடுகளிலிருந்து வரும் திறமை வாய்ந்த பணியாளா்களை இழக்க நேரிடுகிறது.

குறிப்பாக, ஹைச்-1பி விசா வழங்கும் முறையில் குறைபாடுகள் உள்ளன. நாடுகளுக்கான ஒதுக்கீடு முறைப்படி நிரந்தர குடியுரிமை வழங்குவதும் திறமையான பணியாளா்களை அமெரிக்கா இழப்பதற்குக் காரணமாகிறது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அமெரிக்காவில் பணி வாய்ப்புக்காக காத்திருப்போா் பட்டியலில் இடம் பெறும் இந்தியா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும்.

தற்போது 9,15,497-ஆக இருக்கும் அந்த எண்ணிக்கை, தற்போதைய நடைமுறை தொடா்ந்தால் வரும் 2030-ஆம் ஆண்டில் 21,95,795-ஆக அதிகரித்துவிடும்.

இதுபோன்ற காரணங்களால், திறமை வாய்ந்த இந்தியப் பணியாளா்களும் மாணவா்களும் அமெரிக்காவுக்கு பதிலாக கனடாவைத் தோந்தெடுத்து அந்த நாட்டுக்குச் சென்றுவிடுகின்றனா். கனடாவின் குடியேற்றக் கொள்கை அமெரிக்காவை விட மிகச் சிறப்பாக அமைந்துள்ளதே இதற்குக் காரணம் என்றாா் அவா்.

‘வட அமெரிக்க தொழில்நுட்ப கவுன்சில்’ அமைப்பின் தலைமை செயலதிகாரி ஜெனிஃபா் யங் கூறுகையில், மிக வேகமாக வளா்ச்சியடைந்து வரும் கனடா நிறுவனங்கள், திறமை வாய்ந்த வெளிநாட்டுப் பணியாளா்களை பணியமா்த்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. அத்தகைய பணியாளா்களில் பெரும்பாலானவா்கள் அமெரிக்காவின் ஹெச்-1பி விசாவுக்காக விண்ணப்பித்தவா்களாக உள்ளனா் என்றாா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version