Home இந்தியா தடுப்பூசி செலுத்திய பின்னரும் கொரோனா பாதிப்பது ஏன்?

தடுப்பூசி செலுத்திய பின்னரும் கொரோனா பாதிப்பது ஏன்?

 ஆய்வில் பகீர் தகவல் !!

கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை எழுந்துள்ள நிலையில், அதனை தடுக்க தடுப்பூசி போடும் பணி மிகவேகமாக நடைபெற்று வருகிறது. எனினும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. மத்திய அரசு உடனே கூடுதல் தடுப்பூசியை வழங்க கோரிக்கை விடுத்த வருகின்றனர்.

இதனிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் பலர் கொரோனா பாதித்தது பாதித்து வருகின்றனர். இது மருத்துவத்துறையினருக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தியும் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களை அடிப்படையாக வைத்து, இந்தியாவில் ஆய்வு ஒன்றை ஐ.சி.எம்.ஆர். என்கிற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தி உள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா, காஷ்மீர் உள்ளிட்ட 17 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 677 நோயாளிகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் 604 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 71 பேர் கோவேக்சின் தடுப்பூசியும், 2 பேர் சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியும் போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள்.

இவர்களில் 85 பேருக்கு முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பின்னரும், 592 பேருக்கு இரண்டு டோஸ்கள் போட்டுக்கொண்ட நிலையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 86.09 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புக்கு காரணம் டெல்டா வைரஸ் (பி 1.617.2) என தெரிய வந்துள்ளது.

வட மாநிலங்களில் மட்டும் ஆல்பா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி உள்ளது. தெற்கு, மேற்கு, கிழக்கு, வட மேற்கு மாநிலங்களில் டெல்டா வைரசின் பாதிப்பு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

தடுப்பூசிக்கு பின்னர் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் 482 பேர் அறிகுறிகளுடனும், எஞ்சியவர்கள் அறிகுறிகள் இன்றியும் காணப்பட்டுள்ளனர். மார்ச்-ஜூன் மாதங்களில்தான் இந்த டெல்டா வைரஸ் ஆதிக்கம் அதிகமாக இருந்துள்ளது. இருப்பினும் 9.8 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல் இறப்பு விகிதம் வெறும் 0.4 சதவீதமாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

இந்த ஆய்வின்போது டெல்டா ஏஒய்1, டெல்டா ஏஒய்2 என்ற புதிய டெல்டா வைரஸ்களும் கண்டறியப்பட்டிருப்பது புதிய பிரச்னையை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து இவ்வகை கொரோனா வைரஸின் தன்மை குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version