Home உலகம் தலிபான்கள் சாதாரண குடிமக்கள் – இம்ரான் கான்

தலிபான்கள் சாதாரண குடிமக்கள் – இம்ரான் கான்

பாக்., மண்ணில் உள்ள  தலிபான்கள்

தீவிரவாதிகள் அல்லர்!

பாகிஸ்தான் மண்ணில் அகதிகளாக தஞ்சம் புகுந்த தலிபான்கள் சாதாரண குடிமக்களே தவிர தீவிரவாதிகள் அல்லர் எனக் கூறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

அமெரிக்காவின் பிபிஎஸ் நியூஸ்ஹவர் என்ற பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் இம்ரான்கான், “ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைமைக்கு முழுக்க முழுக்க அமெரிக்கா தான் பிரதான காரணம். இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு தலிபான் தீவிரவாதிகள் அல் கொய்தாவின் ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஒசாமாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவும் மறுத்தது.

இந்நிலையில், சூழ்ச்சியின் வழியில் 2001 இல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை தன்வசப் படுத்தியது. ஆப்கன் படைகளுடன் இணைந்து தலிபான்களுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. ஆப்கன் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை. ஆனால், அமெரிக்கா அதை கையில் எடுத்தது.

இருதரப்பில் ஏகப்பட்ட உயிரிழப்புகள் நேர்ந்துவிட்டன. தலிபான்கள் அங்கே ஒடுக்கப்பட்ட நிலையில் அமெரிக்கப் படைகளும் நேட்டோ படைகளும் படைகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தன.

இப்போது அங்கு வெறும் 10,000 பேர் மட்டுமே உள்ளனர். இப்போது அமெரிக்கா, ஆப்கன் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாகக் கூறுவது எடுபடாது. அங்கு மீண்டும் தலிபான்கள் கை ஓங்கிவிட்டது.

அரசியல் தீர்வுக்கு தலிபான்கள் தயாராக இல்லை. தலிபான்கள் பாரம்பரிய பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆப்கன் உள்நாட்டுப் போரினால், ஆப்கானிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கானோர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் தீவிரவாதியாகக் கருத முடியாது. அவர்கள் சாதாரண குடியானவர்களே. பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களை தீவிரவாதிகளின் கூடாரம் என்று குறிப்பிடுவதும் முறையற்றது.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு, அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். தலிபான்களையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த வேண்டும். தலிபான்களுக்கு பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்கள் வழங்கியும், உளவுத் தகவல்கள் வழங்கியும் உதவுகின்றது என்ற குற்றச்சாட்டு நியாயமற்றது” என்று கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version