Home இந்தியா கடவுளால் அனுப்பப்பட்டவர்களே மருத்துவர்கள்

கடவுளால் அனுப்பப்பட்டவர்களே மருத்துவர்கள்

 கோவை மாவட்ட ஆட்சியர் புகழாரம்!

நோயாளிகளின் உடல்நலத்தை சீராக்க கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் மருத்துவர்கள் என்றுகோவையில் நடந்த ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மேற்கு  தென் மாவட்டங்களான கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த 81 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ என்ற சிறப்பு விருதை வழங்கி கவுரவித்தார்.

விருதுகள் பெற்ற அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த உலகில் சிரிப்பு தான் சிறந்த மருந்து. சிரிப்பு மன அழுத்தத்தை போக்கும்.

நம் மன அழுத்தத்தை எது சரி செய்கிறதோ அது தான் நமக்கு சிறந்த மருந்து. குறிப்பாக, தற்போதைய காலத்தில் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தம் உள்ளது. மருத்துவர்களைச் சுற்றி அவ்வளவு கடினமான, அழுத்தங்கள் நிறைந்த வாழ்க்கை உள்ளது.

நோயாளிகளின் உடல் நலத்தை சீராக்க கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் மருத்துவர்கள். கடவுளின் பிரதிநிதியாக மருத்துவர்கள் உள்ளனர். நானும், என் மனைவியும் மருத்துவர்கள். நான் மருத்துவம் முடித்த பிறகே, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நான் படித்த நூல்களில் ‘இந்து நாளிதழ்’ முக்கியமானதாகும்.

நான் மதுரை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். எனவே, மேற்கண்ட பகுதிகளில் இருந்து வந்த பல மருத்துவர்களை கவுரவித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நான் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தபோது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எனக்கு மருத்துவர் பட்டத்தை வழங்கினார்.

எனக்கு பட்டம் அளித்த பின்னர், ‘உங்களுடன் நண்பர் மாதிரி ஓர் ஆள் இருக்க வேண்டும். அந்த நண்பர் இருந்தால், வாழ்க்கையில் எவ்வளவு இக்கட்டான சூழலிலும், எவ்வளவு கடினமான சூழலிலும், நிறைய பிரச்சினைகள், போராட்டம் வந்தாலும் நீங்கள் அமைதியாக இருக்கலாம்’ எனத் தெரிவித்தார்.

அவர் கூறியதை தற்போது வரை பின்பற்றி வருகிறேன். அமைதியாக இருக்கும் பழக்கம் என் மருத்துவ வாழ்க்கையில் கிடைத்த ஓர் அனுபவமாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்னிடம் கூறிய அறிவுரையை நான் வரப்பிரசாதமாக கருதுகிறேன் என்றார் அவர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version