Home Hot News காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் ஒரு ஆடவர்; மரத்தில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்

காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் ஒரு ஆடவர்; மரத்தில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்

தெனோம்: டெலிகோசாங் மினி ஹைட்ரோ அணை கட்டுமான மையத்தில், கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் ஒரு சீன ஆடவர் நேற்று மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

சுரங்கப்பாதை துளையிடுவதில் மிகத்திறமையான தொழிலாளியான யாங் மிங் சோங், (37) என்பவர் சில நாட்களுக்கு முன்பே இறந்ததாக நம்பப்படும் வகையில் உடல் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டார்.

காணாமல் போனவர் தொடர்பில் புகார் கிடைத்ததிலிருந்து, அவரை தேடும் செயல்பாட்டை மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்பு (SAR) குழுவினரால் பாதிக்கப்பட்டவரது உடல் நேற்றுக் காலை 10.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெனோம் மாவட்ட போலீஸ் தலைவர் ஹசான் மஜித் கூறினார்.

உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது, ​​பாதிக்கப்பட்டவர் ஒரு சிவப்பு நிற டி -ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருந்த படி, அந்த பகுதியில் உள்ள மரத்தில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார்.

“காணாமல் போனதாக புகார் செய்யப்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர் தனது அறையில் தங்கியிருந்த நண்பரிடம் தான் வெளியே சென்று தொலைபேசி இணைப்பு உள்ள ஒரு பகுதியைத் தேட விரும்புவதாகக் கூறினார்.

“இருப்பினும், பாதிக்கப்பட்டவர் மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. எனவே பாதிக்கப்பட்டவரின் நண்பர் உடனடியாக தமது நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு, போலீஸில் புகாரளித்தார் “ என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேலும் பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தெனோம் மாவட்ட போலீஸ் தலைமையகம் (IPD), பொது செயல்பாட்டுப் படை (PGA) மற்றும் சபா பேஸ் PDRM விமான செயல்பாட்டுக் குழு (PGI) ட்ரோன் ஆகிய 54 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய SAR செயல்பாடுகளை காவல்துறை தொடர்ந்து முன்னெடுத்தது என்றார்.

அது தவிர, சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) மற்றும் சிவில் பாதுகாப்புப் படை (APM) ஆகியவற்றுடன் சபா போலீஸ் துணைத் தலைமையகத்தின் (IPK) துப்பறியும் நாய் பிரிவு (K 9) ஆகிய பிரிவினரும் இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவியதாக அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தெனோம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது அதனைத்தொடர்ந்து SAR நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது என்றார்.

“இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version