Home Hot News புதிய வழமையில் தீபாவளி பொது விருந்தோம்பல்

புதிய வழமையில் தீபாவளி பொது விருந்தோம்பல்

சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சின் ஒருங்கிணைப்பில் கடந்த சனிக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாலம்பூரிலுள்ள மலேசிய சுற்றுலா மையத்தில் நடைபெற்ற இந்த உபசரிப்பில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கலந்துகொண்டார்.

நாட்டில் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளான நோன்புப் பெருநாள், சீனப்புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பெருநாட்களை முன்னிட்டு இந்த மலேசியப் பொது திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படுகின்றது.

இந்நிலையில் மலேசியக் குடும்ப, சுபிட்சம், பல இன ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தவும் நாட்டின் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்தவும் அமைச்சு இந்த உபசரிப்பை நடத்துகின்றது.

இம்முறை கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக புதிய வழமையில் இந்த உபசரிப்பு நடத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாடு இன்னமும் கோவிட்-19 தொற்றுப் பாதிப்பில் இருந்து விடுபடாததை அடுத்து இம்முறை புதிய வழமையில் தீபாவளிக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆனாலும் அரங்சாங்கம், மக்கள் மத்தியில் வலுவான ஒத்துழைப்பின் மூலம் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகள் நடத்துவது சாத்தியமாகின்றது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மாநிலம் கடந்து பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மலேசியக் குடும்பத்தினர் ஒற்றுமையாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக கிராமங்களில் உள்ள சொந்தபந்தங்களைக் காண்பதற்குப் பயணம் மேற்கொள்வதன் வழி உள்நாட்டுப் பொருளாதாரத் தொடர்புச் சங்கிலி வலுப்படுத்தப்படும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் நம் நாடு பல இன மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை எவ்வாறு வலிமையாகக் கொண்டுள்ளது என்பதை புலப்படுத்தும் வகையில் இந்த உபசரிப்பு நடந்துள்ளது.

நம் நாட்டில் பல இன மக்கள் சுபிட்சமாக வாழும் சூழல்தான் நம் நாட்டிற்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை வருகைபுரியச் செய்யும் முக்கிய அம்சமாக விளங்குகின்றது என சுற்றுலா, கலை, கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹஜ்ஜா நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.

இதற்கிடையே நம் நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதம் (18 வயதிற்கு மேற்பட்டோர்) 90 விழுக்காட்டைக் கடந்துவிட்டது.

இந்தச் சூழல் இந்த முறை தீபாவளிக் கொண்டாட்டம் நேரடியாக நடைபெற வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது என மஇகா தேசியத் தலைவரும் தெற்கு ஆசிய நாடுகளுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதருமான டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கூறினார்.

நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கலந்துகொண்டார். காலை 10 மணி தொடங்கி கண்காட்சி, அழைப்புக் கலைஞர்களின் படைப்புகள், பொதுமக்களுக்கு விருந்துபசரிப்பு என இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version