Home இந்தியா இந்தியாவின் காஷ்மீரில் புத்தாண்டு வழிபாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலி!

இந்தியாவின் காஷ்மீரில் புத்தாண்டு வழிபாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலி!

காஷ்மீர், ஜனவரி 2 :

இந்தியாவின் காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலில் புத்தாண்டு வழிபாட்டில் நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆங்கில புபுத்தாண்டு வழிபாட்டை முன்னிட்டு, வைஷ்ணவி தேவி கோவிலில் வழிபாட்டுக்காக நேற்று முன்தினம் இரவில் இருந்து பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் அங்கு வந்து குவிந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 2½ மணியளவில் கோவில் கருவறைக்கு வெளியே 3-வது ‘கேட்’ அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முன்னே செல்ல முற்பட்டனர்.

அப்போது இளைஞர்கள் சிலரிடையே சிறிய அளவில் கைகலப்பு ஏற்படவே பெரும் பதற்றம் உருவானது. அப்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்து செல்ல முற்பட்டு பலர் கீழே விழுந்தனர். ஆண்கள், பெண்கள் என கீழே விழுந்த பக்தர்கள் மீது பலரும் ஏறிச்சென்றனர். ஓரமாக தரையில் படுத்திருந்தவர்கள் மீதும் கூட்டத்தினர் ஏறிச்சென்றதில் அவர்கள் நசுங்கினர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

உடனடியாக அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. பலியானவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி, கத்ரா அடிவார முகாமில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வைஷ்ணவி தேவி கோவில் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் அலுவலகம் ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இதே போன்று யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில், பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா அறிவித்துள்ளார்.

இருப்பினும் புத்தாண்டு தினத்தில் வைஷ்ணவி தேவி கோவிலில் வழிபாட்டுக்கு சென்ற பக்தர்கள் 12 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version